Monday, 25 July 2016

உறவுகளை சார்ந்திருங்கள்

உயிர் உள்ளது, உயிர் அற்றது என்று, உலகில் உள்ளவற்றை பிரிக்கலாம். உயிர் உள்ள அனைத்தும், உணர்வை வெளிப்படுத்துகின்றன. உணர்வுகளை வெளிப்படுத்துவதால் உறவுகள் ஏற்படுகின்றன. அடுத்த கட்டமாக, உணர்வுகளை பகிர்ந்து கொள்வதும் அவசியமாகிறது. இப்படித் தான், அறிவு மற்றும் எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன.
தனி மரம் தோப்பாகாது; தனி மனிதன் சமூகமாக மாட்டான். உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவற்றை பரிமாறிக் கொள்வதால் பயன் கிடைக்கிறது. நல்லது – கெட்டது, சுகம் – துக்கம், அறிவு – அறியாமை, தெளிவு – குழப்பம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் போதுதான், அவை அர்த்தம் பெறுகின்றன. தோன்றியதை சொல்ல சக மனிதன் தேவைப்படுகிறான். இப்படி பரிமாறிக் கொள்வதால், ஆதாயம் மற்றும் இழப்பு ஆகியவை இரு சாராருக்கும் கிடைக்கிறது. பலனை பொறுத்து, உறவு நிற்கும் அல்லது நீர்த்துப் போகும்.
மனிதன், தனக்காக வாழலாம்; ஆனால், தானாக வாழ முடியாது. இது, உலக நியதி. அதனால்தான், ‘யாருக்காக வாழ்கிறோம்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதைப் பொறுத்து தான், வாழ்க்கையில் ஈடுபாடு ஏற்படுகிறது.
சங்கடப்படும் போதுதான் ஆதரவும், துணையும் அதிகமாக தேவைப்படும். அதுபோல் சந்தோஷமாக இருக்கும்போது, அதை பகிர்ந்து கொள்ளவும், நமக்கு உறவுகள் தேவைப்படுகின்றன. எனவே உறவை சார்ந்திருங்கள்.