இதுதான் ரகசியம்
இன்று நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்கள், நாம் எதிர்பார்த்தபடி இல்லை. நம்மை சுற்றியிருக்கும் நட்பு, உறவு, சூழ்நிலை, சமுதாயம் போன்ற அனைத்துமே சரியில்லை என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக நாம் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடாது என்று நமக்கு நாமே தண்டனை கொடுத்துக்கொண்டு கவலையுடனும், பயத்துடனும், வேதனையுடனும் அமைதியற்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பது சரியா?
இதே மனிதர்களுடன், இந்த சூழ்நிலையில், இதே சமுதாயத்தில்தான் நாம் வாழ்ந்தாகவேண்டும். இந்த வாழ்க்கையை வேதனையுடன் கழிப்பவர்கள் அதற்கு விதி என்று பெயரிட்டிருக்கிறார்கள். சிலரோ, `மதியால் விதியை வெல்லலாம்’ என்றும் கூறுகிறார்கள். விதியை மதியால் வெல்வதற்கான சரியான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
நம் எண்ணங்கள் மூலம், நம் உணர்வுகளை மாற்றலாம். எண்ணங்களை செம்மையாக்கி, உணர்வுகளை மேம்படுத்தி நாம் செய்யும் செயல்கள் அறிவார்ந்தவையாக இருக்கும். அதைத்தான் மதி என்று கூறுகிறோம். அந்த மதி மூலம், விதி என்ற வேதனையை, துயரத்தை நம்மால் போக்க முடியும்.
சமுதாயம், சூழ்நிலை, மனிதர்கள் எல்லாம் மாறினால் நான் நிம்மதியாக இருப்பேன் என்ற எண்ணம் நமக்கு இருப்பது சரியல்ல. நம்மால் நம்மைத்தான் மாற்ற முடியும். மற்றவர்களை மாற்ற முடியாது. அதனால் மற்றவர்கள் மாறினால் நான் நிம்மதியாக இருப்பேன் என்று கூறக்கூடாது. நாம்தான் நம் எண்ணங்களை மாற்றி நம்மை நிம்மதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு எதிரான கருத்தை ஒருவர், சூடாக சொல்லியிருக்கலாம். `அது அவரது கருத்து. அவர் புரியாமல் பேசி இருப்பார். ஏதேச்சையாக அப்படி கூறியிருப்பார். என்னை நோகடிப்பது அவர் நோக்கம் அல்ல..` என்பது போன்ற எண்ணங்களை நீங்களே உருவாக்கி, உங்கள் மனதை நீங்களே ஆறுதல்படுத்திக்கொள்ளவேண்டும்.
சிந்தித்துப்பாருங்கள். ஒருவர் உங்களைப் பற்றி ஒரே ஒரு முறை, உங்களுக்கு பிடிக்காத ஒரு வார்த்தையை பிரயோகித்திருக்கிறார். அதை அதோடு விடாமல் நீங்கள் எத்தனை முறை உங்கள் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அவர் ஒருமுறையோடு விட்டுவிட, நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப அதை நினைத்து உங்கள் மனதை புண்படுத்தவேண்டும். அவர் அப்படி பேசிவிட்டார் என்று பலரிடம்கூறி, உங்களுக்கு ஏற்பட்ட காயத்தை நீங்களே ஏன் ஆறவிடாமல் செய்யவேண்டும்.
உங்கள் மனதின் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் மகிழ்ச்சி மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் அன்றே, அப்போதே அந்த வார்த்தையை மறந்துவிடுவதுதானே நல்லது.
ஒருவரை நீங்கள் சரியில்லாதவர் என்று கூறிக்கொண்டிருக்கும்போது, சிலர் அவரை சிறந்தவர் என்று கொண்டாடிக்கொண்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அதை வைத்து பார்க்கும்போது எந்த மனிதரும் கெட்டவரில்லை என்பது உங்களுக்கு தெரியவரும். எல்லா மனிதர்களிடமும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. அதனால் ஒரு மனிதரின் குறைகளை மட்டும் கண்டுபிடித்து, நம் மனதை குறைபடுத்தி, நம் நிம்மதியை கெடுத்துக்கொண்டிருப்பதைவிட, அவரிடம் இருக்கும் நிறையை பெரிதாக்கி, நமக்குள் நிம்மதியை உருவாக்கிக்கொள்வதுதான் நல்லது. கனி இருக்க நாம் ஏன் காயை கவர்ந்திழுக்க வேண்டும்!