Wednesday 10 August 2016

வாழ்க்கை தத்துவம்


இந்த உலகில் மகிழ்ச்சி என்பது எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் ஏதோ ஒன்றை பறிகொடுத்தது போல எந்த நேரமும் சோகத்துடன் இருக்கிறார்கள். இவர்களின் சிந்தனையும் எப்போதும் எதிர்மறையாகவே இருக்கிறது. எதிர்மறையாகச் சிந்திபவர்கள் எந்த ஒரு செயலிலும் வெற்றி அடைய வெகுநாட்கள் ஆகும். சிலர் மட்டுமே சந்தோஷத்துடன் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அவர்கள் எதிர்மறையான எண்ணங்களை ஆக்கமுள்ளதாக மாற்றிக் கொண்டதே அதற்குக் காரணம்.   `ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கிறது. ஆனால், அந்த ஆசை நிறைவேறியவுடன் நாம் ஆசைபடுவதை நிறுத்திக் கொள்வதில்லை. வேறொன்றின் மீது நம் ஆசை திரும்புகிறது. நடந்து செல்லும்போது சைக்கிள் வாங்க வேண்டும் என்று தோன்றுகிற ஆசை, அது நிறைவேறியவுடன் `பைக்’ மீது திரும்புகிறது. அது நிறைவேறியவுடன் கார் என இப்படியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போது நம்மிடம் இருக்கின்ற பொருள்களைக் கொண்டு திருப்தியடைகிறோமோ, அப்போதுதான் வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தோன்றும்.   வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. சில நேரம் வெற்றி கிடைக்கும். சில நேரம் தோல்வி கிடைக்கும். தோல்வியடையும் சமயங்களில், `நான் எப்போதும் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று புலம்பி அடுத்தகட்ட முயற்சியைக் கைவிட்டு விடுகிறார்கள். இதற்குக் காரணம் `நம்மால் முடியாது’ என்ற எண்ணமே. முதலில் அந்த எண்ணத்தைத் தூக்கி போட்டுவிட்டு, உங்களின் கடந்த கால வெற்றிகளை ஒரு தாளில் எழுதிக்கொண்டே வாருங்கள். நீங்கள் பெற்ற வெற்றியின் சாதனைபட்டியல் உங்களை அடுத்த வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.   ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் உயர்ந்தவராக இருப்பார். அழகு, படிப்பு, குணம், திறமை, செல்வம் இதில் ஒன்றோ அல்லது இரண்டோ ஒருவரிடம் இருக்கலாம். அதற்காக அந்தத் தகுதி நம்மிடம் இல்லையே என மற்றவரை ஒப்பிட்டு பார்த்து தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. நாமே சிறந்தவர் என உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டும். உங்களுடைய சாதனைகள், வெற்றிகள் சிறியதாக இருந்தாலும் அதை எண்ணி பெருமைபட வேண்டும். அதற்காக தற்பெருமைடன் திரியக் கூடாது.   வாழ்க்கையில் எல்லா மனிதர்களுக்கும் சந்தோஷமான சம்பவங்களும் உண்டு, கசப்பான சம்பவங்களும் உண்டு. கசப்பை ஜீரணித்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. `எனக்கு மட்டும் ஏன் எல்லாம் தப்பாகவே நடக்கிறது?’ என்று எண்ணி, அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்கள் பலர். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை. அதை புரிந்து கொண்டு வெற்றிக்கான தேடலைத் தொடங்குங்கள்.   மற்றவருடைய வளர்ச்சியை பார்த்து சந்தோஷபடுபவர்களை விட, பொறாமைபடுபவர்களே அதிகம். ஒருவரை அழிக்கும் மிகபெரிய ஆயுதம் அவரிடம் உள்ள பொறாமைக் குணம்தான். ஒருவருடைய வெற்றியில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அவரை பார்த்து பொறாமைபடத் தேவையில்லை. அவரை பாராட்டி ஊக்கபடுத்துவதன் முலம் நாமும் முன்னேற முடியும். இப்படிச் செய்வதால் அவர் பெற்ற வெற்றி ஒருநாள் உங்கள் பக்கமும் திரும்பும். அதேநேரம் உங்களைவிடவும் அதிகமானோர் இன்னும் மேலே வர முடியாமல் இருக்கின்றனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.   ஒருவருடைய வெற்றியை பார்த்து பொறாமைபடுவதை விட, அந்த வெற்றியை நாமும் அடைய முயற்சி செய்வது தான் சரியான வழி. அனுபவம் இல்லாமல் திடீரென ஒரு செயலில் இறங்கினால் தோல்விதான் கிடைக்கும். எனவே, பிறருடைய வெற்றியில் பங்கு கொண்டு, அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் புதிய முயற்சிகளை மேற்கொண்டால், சரியான வாய்புகள் வரும்போது வெற்றியை அடையலாம். ஒரே குறிக்கோளை அடைய எண்ணி இருவர் முயற்சி செய்யும்போது ஒருவரை மற்றவர் ஊக்கபடுத்தினால் வெற்றியின் இலக்கை விரைவில் அடையலாம்.   எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்து வருபவர்கள், தன்னை பற்றி ஒருபோதும் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கக் கூடாது. இதனால் நல்ல விமர்சனங்களை உருவாக்கக் கூடிய வாய்புகளை அவர்கள் இழக்கக் கூடும். எனவே, எதிர்மறையான விமர்சனங்களை எண்ணி நேரத்தை வீணாக்காமல், நல்ல விமர்சனங்களை உருவாக்குவதில் நேரத்தைச் செலவிடுங்கள். பிறருடன் ஆக்கபூர்வமாக பேசுவதே உங்களை பற்றிய நல்ல எண்ணத்தை பிறரிடம் ஏற்படுத்துவதுடன், நீங்களே உங்களை பற்றி உயர்வாக உணரவும் வழிவகுக்கும்.   எந்த ஒரு செயலையும் சிறப்பாகச் செய்ய அர்பணிப்பும், தெளிவான குறிக்கோளும் அவசியம். முதலில் உங்களுடைய குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை அடைவதற்கான வழிகளைக் கண்டுபிடிங்கள். அதற்காக உங்களின் சக்தி முழுவதையும் செலவழிங்கள். உங்களுடைய வாழ்க்கையையே அர்பணியுங்கள். அந்த செயலில் தோற்றால் அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றால் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதையும் தாமதிக்காமல் உடனே செய்யுங்கள்.   பிறருடைய வெற்றியில் இருந்தோ அல்லது தோல்வியில் இருந்தோ உங்களுக்குத் தேவையானதை கற்றுக் கொள்ளுங்கள். அதிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் வாய்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன? எந்த விஷயங்களை புதிதாக சேர்த்துக் கொண்டார்? எந்த விஷயங்களை தம்மிடம் இருந்து விலக்கி வைத்தார்? போன்ற விஷயங்களை வெற்றி பெற்றவரிடம் இருந்தும், என்ன காரணத்திற்காகத் தோல்வியைத் தழுவினார் என்பதை தோல்வி அடைந்தவரிடம் இருந்தும் தெரிந்து கொள்ளுங்கள்.




வாழ்க்கை என்பது என்ன?

இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?
– உயிரோடு இருப்பதா?
– மகிழ்ச்சியாக இருப்பதா?
– பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?
– தோல்விகளில் கற்றுக் கொள்வதா?
– வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?
– தன்னலமற்ற அர்ப்பணிப்பா?
– தத்துவங்களின் அணிவகுப்பா?
…. இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான்.
இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.
அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுப வங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங் களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண் டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக் கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.
ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட் டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனை யும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.
துன்பம் துரத்தும் போது ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.
நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.
சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?
உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.
தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.
இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.
– நம்மைவிட உடலில் பலசாலி யானை
– நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை
– நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.

வாழ்க்கையில் வெல்ல `6′


“தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்” என்று சொல்வார்கள். எல்லோருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்யும். வெற்றிக்கு முயற்சியும், தன்னம்பிக்கையும் போதும். வெற்றி பெற்றால் மற்றவர் உங்களை திரும்பி பார்க்கலாம், ஆனால் எல்லோரும் உங்களை விரும்பியும், நெருங்கியும் வர வேண்டுமென்றால் 6 அடிப்படை விஷயங்கள் அவசியம். அவை இங்கே…
நம்பிக்கை:
நம்மிடம் இருக்கும் சிறந்த பழக்க வழக்கங்களே பிறரை நம்மை நோக்கி ஈர்க்கும். முதலில் நமக்கு நம் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். நான் அழகானவ(ன்)ள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் இருக்கட்டும். அழகு என்பது சருமத்தில் மட்டுமில்லை. சருமத்தை பராமரித்து அழகு படுத்திவிடலாம். கவர்ச்சியை விட நம்பிக்கை மேலானது. நம்பிக்கையின் பலனையும், ஈர்ப்பையும் உங்கள் வெற்றி தான் மற்றவர்களுக்கு உணர்த்தும்.
நேர்த்தியான உடை:
`நான் கலராக இல்லை. எலும்பும் தோலுமாக இருக்கிறேன். எனக்கு எந்த டிரெஸ் போட்டாலும் நல்லா இருக்காது` என்று எண்ணாதீர்கள். நேர்த்தியாக உடை அணியுங்கள். உடை அணிவது ஆளைக் கவர்வதற்கல்ல என்றாலும், பார்ப்பவர்களை மதிக்கத் தூண்டுவதும் நாம் அணியும் உடை தான். அது உங்களுக்கு வசதியானதாகவும் இருக்கட்டும். நல்ல மரியாதை, நல்ல நட்பு எல்லாவற்றையுமே நல்ல ஆடைகள் உருவாக்கித் தரும். நேர்த்தியான ஆடை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கனிவான பழக்கம்:
வீட்டுக்குள்ளேயே கிணற்றுத் தவளையாக முடங்கிக் கிடந்தால் இந்த உலகத்தின் அதிசயங்கள் உங்களுக்கு தென்படாமலே போகும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் தான் வெற்றியின் முகம் உங்களுக்கு காட்சி தரும். எனவே ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் இணைந்து சமூக சேவை செய்யும் விதமாக வெளியே கழித்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது உங்களுக்கு புதிதாக பலர் அறிமுகமாகலாம். நீங்களும் முதலில் உங்களை அறிமுகம் செய்து பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பழக பழகத்தான் நம் பலமும், பலவீனமும் தெரியும். பிறகு நம் நடையை மாற்றி வெற்றி நடை போடலாம்.
நட்பை தேர்வு செய்யுங்கள்:
வெற்றிக்குத் துணை நம்பிக்கை மட்டுமல்ல, நட்பும் தான். யாருடன் சினேகிதம் கொள்கிறோமோ அவர்களின் பழக்கம் நமக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் நட்பு கொள்வதில் அதிக கவனம் அவசியம். அதேபோல அருகில் இருப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியோருடன் நட்புறவுடன் இணக்கமாக பழகுவதும் வாழ்க்கையில் வெற்றிக்கு உதவும். உங்களின் அழைப்பை மதிப்பவருடனும், மரியாதையுடன் பழகுபவருடனும், உங்கள் நலனில் அக்கறை கொள்பவருடனும் நட்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள்:
நீங்கள் நிறைவான தோற்றத்தில் இருக்கும்போது பலரும் உங்களைப் பற்றி பேசிக் கொள்வார்கள். அதுபோல குறையான தோற்றத்தில் இருந்தாலும் பலரும் விமர்சிப்பார்கள். புகழ் பேச்சில் மயங்காமலும், குறை காணும் விமர்சனங்களில் கலங்காமலும் இருங்கள்.
விலக்க வேண்டியவை:
வெற்றிக்காக விலக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. முதலாவது எதிர்மறையாக பேசுபவர்களை விட்டு விலகுங்கள். அடுத்ததாக நேரத்தையும், செல்வத்தையும் விரயம் செய்யும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். நண்பர்களுடன் அதிகமாக அரட்டையடிப்பது, தூங்கிக் கழிப்பது, தியேட்டரில் கழிப்பது போன்றவற்றை விலக்குவதன் மூலம் நேரத்தையும், செல்வத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த ஆறும் இருந்தால் வெற்றி உங்களைச் சேரும், மற்றவர்களும் உங்களிடம் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.

உங்கள் பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்


உலகில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். அடிப்படையில் மனிதர்களின் குணங்கள் வேறுபட்டிருக்கும். பார்வையில், கொள்கையில், ரசனையில், பேச்சில், நடத்தையில், என்று எல்லாமே ஒன்று போல் இருப்பதில்லை. நாம் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என்றால், ஏன் வெவ்வேறு விதமான உடைகள் உருவாக்கபடுகின்றன? வெவ்வேறு சுவை உணவுகள் சமைக்கபடுகின்றன… வெவ்வேறு கலைகள் உருவாக்கபடுகின்றன?!
நாம் விரும்பும் ஒரு விஷயம்… அடுத்தவருக்கு வெறுபாய் அமையும். ஒருவரின் தனித்தன்மை அடுத்தவரிடம் இருப்பதில்லை. தம்முடைய பலம் மற்றும் பலவீனத்தில் மனிதர்கள் வேறுபடுகின்றனர்.
இதை நாம் மிகச் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே ஆற்றல் மிக்க விதத்தில் செயல்பட முடியும். ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க… நம்முடைய திறமையை வெளிபடுத்தவும், நமது திறமைக்கேற்ற வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அது உதவும்.
நம்மிடம் உள்ள சிறப்பான திறனை, நாம் தெரிந்து கொள்வது அவசியம். நமக்கென்று ஒரு செயலை செய்யும் ஸ்டைல் இருக்கும். அதை நாம் கண்டறிந்தால் மட்டுமே எந்த வேலையுடனும் நாம் நம்மை பொருத்திக் கொள்ள முடியும்.
நம்முடைய செயல்முறைதான் ஒன்றை எளிதாக்குகிறது… அல்லது கடினமாக்குகிறது. செயல்முறையை பொறுத்தே ஒன்றை முன்கூட்டியோ, அல்லது தாமதமாகவோ செய்ய முடிகிறது.
தொழில் அல்லது வேலையில் பலங்கள் மற்றும் பலவீனங்கள் பற்றிய மதிப்பீடு கண்டிப்பாக உதவும். முதலில் உங்களுடைய மிக பெரிய பலம் எது என்று கண்டுபிடிங்கள். செயலாற்றும் திறமை, உயர் நுணுக்க அறிவு, ஆர்வங்கள் ஆகியவற்றில் உங்களுடைய பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்.அதேபோல், உங்களுடைய பண்பு நலன்கள், திறன்களை பட்டியலிடுங்கள். படிப்பில், வேலையில், சொந்த வாழ்க்கையில் உங்களுடைய பண்பு நலன்கள் எந்தளவுக்கு உங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றன என்பதை ஆராயுங்கள்.
உங்களுக்கு மிக பெரிய சவாலாக இருக்கும் விஷயம் எது என்பதை அறிந்து, அதை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள்.
` உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்..’ என்கிறார்கள். முதலில் உங்களை நீங்களே சுய விமர்சனம் செய்யுங்கள்! நீங்கள் கற்பனையாளரா..? அல்லது எதையும் அணுகி ஆராய்பவரா..? அல்லது எந்திரத்தனமானவரா..? என்பதை அறிந்து அதற்கான தொழிலை அல்லது வேலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
உடல் நன்றாக இல்லாவிட்டால் மனம் பாதிக்கபடும். மனம் சீராக இல்லாவிட்டால் உடல் பாதிக்கபடும். உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் வேலையை செய்து முடிக்க இயலும். தன்னிடம் உள்ள திறமைகளை, செயல் திறனை முழுமையாக வெளிபடுத்த ஆரோக்கியம் அவசியம்.
ஒரு வேலையை நீங்கள் தள்ளி போடுவது அதன் பின்னர், தொடர்ச்சியாக பல வேலைகளைக் கிடப்பில் போடும்படி செய்து விடும். உங்கள் சுமைதான் மேலும் அதிகரிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். செயல் தாமதத்தால் விரும்பத்தகாத விளைவுகள், இழப்புகள் உண்டாகும்.
இன்றைக்கே முடிக்கக் கூடிய வேலையை நாளைக்கு என்று தள்ளி போட வேண்டாம். அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டிலும் வேலையைத் தள்ளி போடுகிற பழக்கம் நமக்கு இருக்கிறது. ஐந்து நிமிடம் செய்ய வேண்டிய வேலையை தள்ளி போடுவதால் இறுதியில் அந்த வேலையின் மீது வெறுப்பு ஏற்படும். இதனால் அடுத்தவர்கள் நம்மீது வைத்திருக்கும் அபிப்ராயம் கெட்டுவிடும் சூழல் ஏற்படும்.