Wednesday, 10 August 2016

உங்கள் பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்


உலகில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். அடிப்படையில் மனிதர்களின் குணங்கள் வேறுபட்டிருக்கும். பார்வையில், கொள்கையில், ரசனையில், பேச்சில், நடத்தையில், என்று எல்லாமே ஒன்று போல் இருப்பதில்லை. நாம் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என்றால், ஏன் வெவ்வேறு விதமான உடைகள் உருவாக்கபடுகின்றன? வெவ்வேறு சுவை உணவுகள் சமைக்கபடுகின்றன… வெவ்வேறு கலைகள் உருவாக்கபடுகின்றன?!
நாம் விரும்பும் ஒரு விஷயம்… அடுத்தவருக்கு வெறுபாய் அமையும். ஒருவரின் தனித்தன்மை அடுத்தவரிடம் இருப்பதில்லை. தம்முடைய பலம் மற்றும் பலவீனத்தில் மனிதர்கள் வேறுபடுகின்றனர்.
இதை நாம் மிகச் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே ஆற்றல் மிக்க விதத்தில் செயல்பட முடியும். ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க… நம்முடைய திறமையை வெளிபடுத்தவும், நமது திறமைக்கேற்ற வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அது உதவும்.
நம்மிடம் உள்ள சிறப்பான திறனை, நாம் தெரிந்து கொள்வது அவசியம். நமக்கென்று ஒரு செயலை செய்யும் ஸ்டைல் இருக்கும். அதை நாம் கண்டறிந்தால் மட்டுமே எந்த வேலையுடனும் நாம் நம்மை பொருத்திக் கொள்ள முடியும்.
நம்முடைய செயல்முறைதான் ஒன்றை எளிதாக்குகிறது… அல்லது கடினமாக்குகிறது. செயல்முறையை பொறுத்தே ஒன்றை முன்கூட்டியோ, அல்லது தாமதமாகவோ செய்ய முடிகிறது.
தொழில் அல்லது வேலையில் பலங்கள் மற்றும் பலவீனங்கள் பற்றிய மதிப்பீடு கண்டிப்பாக உதவும். முதலில் உங்களுடைய மிக பெரிய பலம் எது என்று கண்டுபிடிங்கள். செயலாற்றும் திறமை, உயர் நுணுக்க அறிவு, ஆர்வங்கள் ஆகியவற்றில் உங்களுடைய பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்.அதேபோல், உங்களுடைய பண்பு நலன்கள், திறன்களை பட்டியலிடுங்கள். படிப்பில், வேலையில், சொந்த வாழ்க்கையில் உங்களுடைய பண்பு நலன்கள் எந்தளவுக்கு உங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றன என்பதை ஆராயுங்கள்.
உங்களுக்கு மிக பெரிய சவாலாக இருக்கும் விஷயம் எது என்பதை அறிந்து, அதை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள்.
` உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்..’ என்கிறார்கள். முதலில் உங்களை நீங்களே சுய விமர்சனம் செய்யுங்கள்! நீங்கள் கற்பனையாளரா..? அல்லது எதையும் அணுகி ஆராய்பவரா..? அல்லது எந்திரத்தனமானவரா..? என்பதை அறிந்து அதற்கான தொழிலை அல்லது வேலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
உடல் நன்றாக இல்லாவிட்டால் மனம் பாதிக்கபடும். மனம் சீராக இல்லாவிட்டால் உடல் பாதிக்கபடும். உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் வேலையை செய்து முடிக்க இயலும். தன்னிடம் உள்ள திறமைகளை, செயல் திறனை முழுமையாக வெளிபடுத்த ஆரோக்கியம் அவசியம்.
ஒரு வேலையை நீங்கள் தள்ளி போடுவது அதன் பின்னர், தொடர்ச்சியாக பல வேலைகளைக் கிடப்பில் போடும்படி செய்து விடும். உங்கள் சுமைதான் மேலும் அதிகரிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். செயல் தாமதத்தால் விரும்பத்தகாத விளைவுகள், இழப்புகள் உண்டாகும்.
இன்றைக்கே முடிக்கக் கூடிய வேலையை நாளைக்கு என்று தள்ளி போட வேண்டாம். அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டிலும் வேலையைத் தள்ளி போடுகிற பழக்கம் நமக்கு இருக்கிறது. ஐந்து நிமிடம் செய்ய வேண்டிய வேலையை தள்ளி போடுவதால் இறுதியில் அந்த வேலையின் மீது வெறுப்பு ஏற்படும். இதனால் அடுத்தவர்கள் நம்மீது வைத்திருக்கும் அபிப்ராயம் கெட்டுவிடும் சூழல் ஏற்படும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.