Tuesday 2 August 2016

அமைதியான நதியில்…!

மனதை ஒரு நிலைப்படுத்தும் போது கிடைக்கும் வெற்றி, அதை அலைபாய விடும் போது தோல்விக்கு வித்திடுகிறது. மனம் குழப்பத்தில் நிறைந்திருக்கும் போது, சிந்தனைகள் தடம் மாறுகின்றன; இது, ஆசை, பேராசை, பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஏற்பட முக்கிய காரணமாகிறது.
இதிலிருந்து விடுபட, தியானம் செய்வது, முதலிடத்தை பிடிக்கிறது. முறையாக செய்து பார்த்தால், நிச்சயமாக அதன் பலனை அனுபவிக்க முடியும்.
அதிகாலையில், அமைதியான சூழலில், யாரும் தொந்தரவு செய்யாத இடத்தில் கண்களை மூடி, ஏதாவது ஒரு சிந்தனையில், மனதை செலுத்த வேண்டும். இதன் மூலம், உடலும், உள்ளமும் ஆரோக்கியம் பெறும். நாம் எண்ணிக் கொண்டிருக்கும் இலக்கை, சுலபமாக அடைய உதவும்.
தினமும் பயிற்சி செய்ய முடியாதவர்கள், வாரத்தில் ஒருமுறையாவது முயற்சி எடுக்க வேண்டும். வீடு, அலுவலகம், நண்பர்கள், விருந்தினர்கள் மத்தியில் என, எல்லா இடங்களிலும், சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் காணப்படுவீர்கள்.
எந்தப் பெரிய விஷயத்தையும், எளிதாக எடுத்துக் கொள்ளும் இயல்பு வந்து விடும். சக மனிதர்களிடம் அன்பை பரிமாற வைக்கும். இளைஞர்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம், இளமை தான். இந்த வயதிலிருந்தே கடைபிடிக்க ஆரம்பித்தால், முதுமை வந்த பின்பும் கூட, மனம் மற்றும் உடல் சார்ந்த சிக்கலுக்கு இடமிருக்காது.
இன்றைக்கு நகரவே முடியாத அளவுக்கு பணி இருக்கிறது என்று, ஒதுக்க நினைத்தால், நாளடைவில் தள்ளியே போகும் தியானம். குறிப்பிட்ட வேலைகளை, சரியான நேரத்துக்குள், சிறப்பாக நிறைவேற்றுவதற்கு தியானம் முக்கியமான அம்சமாக கருதப்
படுகிறது. எனவே, ஆரோக்கியமாக வாழ்வதற்கு முடிவெடுத்து விட்டால், இன்றே துவங்குங்கள் தியானம்.

பிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்!

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அது ஒப்ப நில்!
இந்த குறளுக்கு நமக்கு கண்டிப்பாய் விளக்கம் தெரிந்திருக்கும். நமக்கு துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சியே, அந்த துன்பத்தை தூர காணாமல் போக்கிவிடும். அந்த துன்பத்திற்கு நிகர், அந்த நேர மகிழ்ச்சி தான்.
சமீபத்தில் ஒரு வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இதற்கான ஒரு புது விளக்கம், நாம் ஒத்துக் கொள்கிற மாதிரி, வேறு விதமாக கூறப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றால், – துன்பம் வரும்போது நகர்ந்து விடுங்கள் என அர்த்தம்.
அதற்காக, ‘துன்பத்தை பார்த்து பயந்து ஓடி விடுங்கள்’ என்று நேர் அர்த்தம் கொள்ளக் கூடாது; அந்த துன்ப மனநிலையிலிருந்து நகர்ந்து, தள்ளி நின்று, அந்த பிரச்னையை – துன்பத்தை கவனியுங்கள்; தீர்வு கிடைக்கும் என்பதாக விளக்கம் கூறினர்.
இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை,
ஒத்துக் கொள்ளக் கூடியதா என்று சில திருக்குறள் ஆர்வலர்களிடம் கேட்டேன்.’இதுவரை திருக்குறளுக்கு என்று திருவள்ளுவரால் இயற்றப்பட்ட பொழிப்புரை ஒன்று தனியாக கிடையாது. படித்தவர்கள் அவரவர் வசதிக்கேற்ப, புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப இயற்றிய பொழிப்புரை தான் வழக்கத்தில் இருந்து வருகிறது. அதனால், இதையும் ஒரு விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்; தவறொன்றுமில்லை’ எனக் கூறினர்.
‘நகுக’ என்றால் என்ன?
யோசித்து பார்த்தால், இந்த, ‘நகுக’ என்பதற்கு இப்படி நகர்ந்து போவது என்றே வைத்துக் கொண்டால் கூட நன்றாகத் தான் இருக்கும் என்றே தோணுகிறது. நீங்கள் மிகவும் துன்பத்தில் இருக்கும் போது, ‘அய்யய்யோ… நான் படும் துன்பத்தை சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே…’ என்று வெறுப்படைந்து விடாமல், ‘இல்லை! நான் மகிழ்ச்சியோடு தான் இருக்கிறேன்’ என்று நேர்மறையாக சிந்திக்கும் சித்தாந்தத்தின் படி, மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீங்கள் முயற்சி செய்தால், மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும்.
அதற்கு பதிலாக உங்களின் சிந்தனையை நீங்களே சற்றுத் தள்ளி நின்று, கவனிக்க ஆரம்பியுங்கள்.
துன்பமான சிந்தனையோ, மகிழ்ச்சியான சிந்தனையோ, சபலமான சிந்தனையோ…
அதை நீங்களே விலகி நின்று பார்க்கும்போது,
உங்களுக்குள்ளே, ‘புரிந்து கொள்ளல்’ நடக்கும்.இதுபோன்ற மனநிலை வந்து விட்டால் துன்பம், மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்று தான்! மகிழ்ச்சி
எப்படி ஓர் அனுபவமோ, அதே போல் துயரமும் ஓர் அனுபவமே! ஆனால் மனதில் அமைதியும், தெளிவும் இல்லாத மனிதர்களுக்கு, மகிழ்ச்சி கூட சோகமானதாய் போய்விடும். ஆனால் மனதுக்குப் பிடித்து விட்டால், இனிப்பு என்பது எப்படி ஒரு சுவையோ, அதேபோல், கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணர்ந்து கொண்டால், ‘பிரச்னையா… அய்யோ, இதென்ன எனக்கு மட்டும் இப்படி கசக்கிறதே!’ என்ற
புலம்பலோ இருக்காது!: சிறுபிள்ளையாக இருக்கும்போது, இனிப்பு ஒன்று தான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை என்று, நமக்கு நாமே முடிவெடுத்து, மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் மூடி விடுகிறோம்.
அது போல, மகிழ்ச்சி மட்டும் தான் நல்ல உணர்ச்சி; மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணர்ச்சிகள் என்று எண்ணி நாம், அனேக உணர்ச்சிகளுக்கு கதவை திறப்பது இல்லை; பயத்துடனேயே அதை எதிர்நோக்காமல் விட்டு விடுகிறோம்.
பிரச்னைகளை விட்டு ஓடவோ, விலகி ஒதுங்கவோ கூடாது. அப்படியே துன்பம் ஏற்பட்டுவிட்டால், கத்தி கூப்பாடு போட்டு அதகளம் பண்ணுவதில் அர்த்தம் இல்லை. ‘இது எனக்கான துன்பம் இல்லை… யாருக்கோ உள்ளது. அவர்களுக்கு வெளியில் ஒரு மூன்றாவது மனிதராய் நான் என்ன தீர்வு சொல்ல இயலும், முடியும்’ என்கிற மாதிரி தள்ளி நின்று யோசித்தாலே அந்த துன்பத்தின் வீரியம் குறைந்து, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும்.
ஒவ்வொரு நொடியும் நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான விளைவு தான், நாம் வாழ்க்கையில் சந்திக்கும் இன்பங்களும், துன்பங்களும். வேதனையான சூழ்நிலையில் எதிர்பாராத பாதிப்புகள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகின்றன. ஆனால், எந்த சூழ்நிலையிலும், வாழ்க்கையில் ஓர் அர்த்தம் உள்ளது என்பதை, நாம் கண்டுகொள்ள வேண்டும்.
இருண்ட பக்கங்கள்?
துன்பம் நம்மை சூழ்ந்துக் கொள்ளும் போது : வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் முழுமையாக ஆட்கொண்டது போல தோன்றுகிறது.
துன்பத்தை ஒரு எல்லையில் வைத்து பார்ப்பது கடினம் தான். பழகினால், பழக்கிக் கொண்டால், இதெல்லாம் நமக்கு ஒரு விஷயமா என்று நீங்கள் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல், தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது மனம் தானாகவே அமைதி அடையும். திரைகள் விலகும்; உண்மைகள் புரியும். வாழ்க்கை அழகாக,
அற்புதமானதாக, ஒரு மலரைப் போல மவுனமாக மென்மையாக விரியும். முயற்சித்து தான் பார்ப்போமே, கொஞ்சம்
நகர்ந்து நின்று!

முன்னேறத் தூண்டும் `சுய கவுரவம்’


வ்வொரு மனிதனுக்கும் சுயகவுரவம் உண்டு. அது தான் அவனை தன்னம்பிக்கையோடு வழிநடத்திச் செல்ல உதவுகிறது.
ஒரு பழைய கதை உண்டு. அதாவது, ஒரு விளக்கில் அடைபட்டுக் கிடந்த பூதமானது, அந்த விளக்கை துடைத்து. தன்னை விடுதலை செய்பவனின் விருப்பங்களை நிறைவேற்றித் தருவதாக கூறியது. இந்தச்சூழ்நிலை உனக்கு ஏற்பட்டால். நீ என்ன கேட்பாய்?
ஒரு கார் வேண்டும் என்று கேட்பாயா? அல்லது ஏராளமான செல்வம் வேண்டும் என்று கேட்பாயா? அல்லது தனக்கு கவலையே இல்லாத ஒரு வாழ்க்கை வேண்டும் என்று கேட்பாயா?
அல்லது நீ உன்னைப் பற்றியே சுயமாகச் சிந்திக்காமல் இருந்தால் வேறு என்ன கேட்பாய்?
உனது நண்பர்களுக்காகவும், நீ விரும்புகிறவர்களுக்காவும், நீ உன்னைச் சார்ந்திருப்பவர்களுக்காகவும், நீ என்ன வரம் கேட்பாய்?
உனது சுய கவுரவத்தை பாதிக்காத வகையில், மிகவும் திருப்தி அளிக்கக்கூடிய சந்தோஷத்தையும், தன்னம்பிக்கையையும் கேட்டால், அது எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்.
மற்றவர்கள் உன்னைப்பற்றி உயர்வாகச் சொல்லுவது சுய கவுரவம் ஆகாது. நீ விலை மதிப்பற்றவன் என்பதை நீயே உணர்ந்து கொள்ளுவது தான் சுயகவுரவம்.
நீ முழுமையாக குற்றமற்றவன் என்று நினைத்தால் மட்டும் போதாது. நீ குற்றமற்றவன் என்பதை, உன்னை நேசிக்கிற மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சுயகவுரவம் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், அது அவன் முன்னேற தூண்டுகோலாக இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
நமது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவைகள் ஏராளமாக இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சுய கவுரவம் 
சுய கவுரவத்தை இரண்டு வகையாகச் சொல்வது உண்டு. ஒன்று நம்மை நாமே மதிப்பது. இன்னொன்று, மற்றவர்கள் நம்மை மதிக்கும்படி நடந்து கொள்வது.
நமது உள்மனதின் மதிப்பீடு தான் சுயகவுரவம். இது தான் நிரந்தரமானது. மற்றவர்கள் நம்மை அங்கீகரிப்பது, நமது தகுதியை ஏற்றுக்கொண்டு பாராட்டுவது என்பது நிரந்தரமானது அல்ல.
சுயகவுரவத்தை வளர்ப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன.
நம்மை நோக்கி வரக்சுடிய துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், அதை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வது தான் உனது சிந்தனையாக இருக்க வேண்டும்.
உனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய 3 விஷயங்களை மனதில் நிறுத்திக் கொள்.
நம்மால் முடியும் என்று நீயே உன்னை பாராட்டிக் கொள்.
தவறு செய்யும்போது தான், நீ மேலும் உறுதியாக வளர அதிக அளவில் வாய்ப்பு ஏற்படும்.
குற்றங்களை ஒத்துக் கொள். காரணம், குற்றம் செய்யாதவர்களே இல்லை. தவறு தான் நமது வாழ்க்கையின் படிப்பினை ஆக அமைகிறது.
உன்னுடைய திறமைகளை எல்லாம் நீ பரிசோதித்துப் பார். அப்போது தான் உனக்குள் இருக்கும் புதிய திறமைகள் வெளிப்படும்.
உன்னால் முடியாத இலக்கை நிர்ணயிக்காதே. ஆனால் பெரிய இலக்குகளை, சிறிது சிறிதாக நிறைவேற்ற வேண்டும். அப்போது உனக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.
நடந்த நல்லவற்றையே நினைவில் வைத்துக் கொள். வாழ்க்கையில் உன்னை விட உயர்ந்தவர்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார்க்காதே.
உனக்குச் சமமாக இருப்பவர்களை கவனி. பலரது வாழ்க்கையில் குறைபாடுகளும், பிரச்சினைகளும் இருப்பதை நீ புரிந்து கொள்வாய்.
அப்போது உன் மனதில் ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மை, உன்னை விட்டு, காலைப்பனி போல மறைந்து விடும்.
உனக்கு ஏற்றத் தாழ்வுகள் வரும்போது கூட, உன்னைப் பாராட்டுபவர்களும், உனக்கு தன்னம்பிக்கை கொடுக்கக்கூடியவர்களும் உன்னைச் சுற்றி இருக்குமாறு வைத்துக் கொள்.
சுய கவுரவம் உள்ளவர்களே வெற்றி பெறுபவர்களாக திகழ்கிறார்கள். எனவே சுய கவுரவத்தையே உனது குறிக்கோளாக வைத்துக் கொள்.உன்னைப்பற்றி நீ நல்ல விதமாக உணர்ந்தால், வெற்றி உன்னைத் தானாகத்தேடி வரும்.