Tuesday, 2 August 2016

பிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்!

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அது ஒப்ப நில்!
இந்த குறளுக்கு நமக்கு கண்டிப்பாய் விளக்கம் தெரிந்திருக்கும். நமக்கு துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சியே, அந்த துன்பத்தை தூர காணாமல் போக்கிவிடும். அந்த துன்பத்திற்கு நிகர், அந்த நேர மகிழ்ச்சி தான்.
சமீபத்தில் ஒரு வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இதற்கான ஒரு புது விளக்கம், நாம் ஒத்துக் கொள்கிற மாதிரி, வேறு விதமாக கூறப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றால், – துன்பம் வரும்போது நகர்ந்து விடுங்கள் என அர்த்தம்.
அதற்காக, ‘துன்பத்தை பார்த்து பயந்து ஓடி விடுங்கள்’ என்று நேர் அர்த்தம் கொள்ளக் கூடாது; அந்த துன்ப மனநிலையிலிருந்து நகர்ந்து, தள்ளி நின்று, அந்த பிரச்னையை – துன்பத்தை கவனியுங்கள்; தீர்வு கிடைக்கும் என்பதாக விளக்கம் கூறினர்.
இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை,
ஒத்துக் கொள்ளக் கூடியதா என்று சில திருக்குறள் ஆர்வலர்களிடம் கேட்டேன்.’இதுவரை திருக்குறளுக்கு என்று திருவள்ளுவரால் இயற்றப்பட்ட பொழிப்புரை ஒன்று தனியாக கிடையாது. படித்தவர்கள் அவரவர் வசதிக்கேற்ப, புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப இயற்றிய பொழிப்புரை தான் வழக்கத்தில் இருந்து வருகிறது. அதனால், இதையும் ஒரு விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்; தவறொன்றுமில்லை’ எனக் கூறினர்.
‘நகுக’ என்றால் என்ன?
யோசித்து பார்த்தால், இந்த, ‘நகுக’ என்பதற்கு இப்படி நகர்ந்து போவது என்றே வைத்துக் கொண்டால் கூட நன்றாகத் தான் இருக்கும் என்றே தோணுகிறது. நீங்கள் மிகவும் துன்பத்தில் இருக்கும் போது, ‘அய்யய்யோ… நான் படும் துன்பத்தை சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே…’ என்று வெறுப்படைந்து விடாமல், ‘இல்லை! நான் மகிழ்ச்சியோடு தான் இருக்கிறேன்’ என்று நேர்மறையாக சிந்திக்கும் சித்தாந்தத்தின் படி, மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீங்கள் முயற்சி செய்தால், மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும்.
அதற்கு பதிலாக உங்களின் சிந்தனையை நீங்களே சற்றுத் தள்ளி நின்று, கவனிக்க ஆரம்பியுங்கள்.
துன்பமான சிந்தனையோ, மகிழ்ச்சியான சிந்தனையோ, சபலமான சிந்தனையோ…
அதை நீங்களே விலகி நின்று பார்க்கும்போது,
உங்களுக்குள்ளே, ‘புரிந்து கொள்ளல்’ நடக்கும்.இதுபோன்ற மனநிலை வந்து விட்டால் துன்பம், மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்று தான்! மகிழ்ச்சி
எப்படி ஓர் அனுபவமோ, அதே போல் துயரமும் ஓர் அனுபவமே! ஆனால் மனதில் அமைதியும், தெளிவும் இல்லாத மனிதர்களுக்கு, மகிழ்ச்சி கூட சோகமானதாய் போய்விடும். ஆனால் மனதுக்குப் பிடித்து விட்டால், இனிப்பு என்பது எப்படி ஒரு சுவையோ, அதேபோல், கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணர்ந்து கொண்டால், ‘பிரச்னையா… அய்யோ, இதென்ன எனக்கு மட்டும் இப்படி கசக்கிறதே!’ என்ற
புலம்பலோ இருக்காது!: சிறுபிள்ளையாக இருக்கும்போது, இனிப்பு ஒன்று தான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை என்று, நமக்கு நாமே முடிவெடுத்து, மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் மூடி விடுகிறோம்.
அது போல, மகிழ்ச்சி மட்டும் தான் நல்ல உணர்ச்சி; மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணர்ச்சிகள் என்று எண்ணி நாம், அனேக உணர்ச்சிகளுக்கு கதவை திறப்பது இல்லை; பயத்துடனேயே அதை எதிர்நோக்காமல் விட்டு விடுகிறோம்.
பிரச்னைகளை விட்டு ஓடவோ, விலகி ஒதுங்கவோ கூடாது. அப்படியே துன்பம் ஏற்பட்டுவிட்டால், கத்தி கூப்பாடு போட்டு அதகளம் பண்ணுவதில் அர்த்தம் இல்லை. ‘இது எனக்கான துன்பம் இல்லை… யாருக்கோ உள்ளது. அவர்களுக்கு வெளியில் ஒரு மூன்றாவது மனிதராய் நான் என்ன தீர்வு சொல்ல இயலும், முடியும்’ என்கிற மாதிரி தள்ளி நின்று யோசித்தாலே அந்த துன்பத்தின் வீரியம் குறைந்து, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும்.
ஒவ்வொரு நொடியும் நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான விளைவு தான், நாம் வாழ்க்கையில் சந்திக்கும் இன்பங்களும், துன்பங்களும். வேதனையான சூழ்நிலையில் எதிர்பாராத பாதிப்புகள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகின்றன. ஆனால், எந்த சூழ்நிலையிலும், வாழ்க்கையில் ஓர் அர்த்தம் உள்ளது என்பதை, நாம் கண்டுகொள்ள வேண்டும்.
இருண்ட பக்கங்கள்?
துன்பம் நம்மை சூழ்ந்துக் கொள்ளும் போது : வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் முழுமையாக ஆட்கொண்டது போல தோன்றுகிறது.
துன்பத்தை ஒரு எல்லையில் வைத்து பார்ப்பது கடினம் தான். பழகினால், பழக்கிக் கொண்டால், இதெல்லாம் நமக்கு ஒரு விஷயமா என்று நீங்கள் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல், தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது மனம் தானாகவே அமைதி அடையும். திரைகள் விலகும்; உண்மைகள் புரியும். வாழ்க்கை அழகாக,
அற்புதமானதாக, ஒரு மலரைப் போல மவுனமாக மென்மையாக விரியும். முயற்சித்து தான் பார்ப்போமே, கொஞ்சம்
நகர்ந்து நின்று!

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.