Friday, 8 January 2021

 இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...

(இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)


.பயனுள்ள பதிவு தவறாமல் படிக்கவும்...


உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.


நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.


உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.


ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....


ஒவ்வொரு மனிதனும்

தனித்தனி ஜென்மங்கள்.

தனித்தனி பிறவிகள்

தனித்தனி ஆன்மாக்கள்


அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .


அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.


இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.


அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.


அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. 


எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?


ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.


அவர்களுக்கு அனுபவம் தான் குரு.


அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.


செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.


நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது. 


எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.

அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்க்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.


நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.


இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.


உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்


நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.


மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.


உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்...அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.


தைரியமும் தன்னம்பிக்கையும் தான் 

ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.


இப்பதிவை பத்திரப்படுத்தி , உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பொறுமையாக மீண்டும் ஒருமுறை படிக்கவும்... 

நன்றி.

மகிழ்வித்து மகிழ்

Tuesday, 29 September 2020

 கடமை எனும் கர்மாவினை பிரதிபலன் எதிர்பாராது செய்பவர் எவரோ அவரையே கர்மபலன் வந்தடைகிறது. இதை அறிய நெடுங்காலம் ஆகி விடுகிறது வாழ்க்கை பாதையில்.

சிந்தித்து செயலாற்றுங்கள்

 நல்லதே நடக்கும். இங்கு வருத்தமோ கலக்கமோ நமக்கு பயனை அளிக்காது. இருந்தாலும் மனம் ஏனோ அதை ஏற்க மறுக்கிறது.

சிந்தித்து செயலாற்றுங்கள்

Monday, 21 September 2020

 பிறரை மகிழ்வித்து 

வாழ்வோம் மகிழ்வுடன்!


மாலை 6:30 மணியளவில் நாங்கள் ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.


 அந்த நேரத்தில், 

ஒரு மனிதன் தனது ஒன்பது முதல் பத்து வயது மகளுடன் வந்து முன் மேஜை முன்பு அமர்ந்தார்.


 அவரது சட்டை சேறும் சகதியுமாக இருந்தது, முதல் இரண்டு பொத்தான்கள் காணவில்லை. 


 சாலையில்  

வேலை செய்யும் 

ஒரு தொழிலாளி போல் இருந்தது, 


சிறுமியின் ஃபிராக் கழுவப்பட்டுச் சுத்தமாக இருந்தது, அவள் தலைமுடியை எண்ணெயிட்டுச் சுத்தமாக வைத்திருந்தாள்.


 அவள் முகத்தில் 

ஒரு மகிழ்ச்சி தோன்றியது.  ஹோட்டலின் 

முழு அழகையும் 

அவள் ரசிப்பதை நாங்கள் கவனித்தோம். 


 மேலே இருந்து குளிர்ந்த காற்றை வழங்கிய விசிறியின் மீது அவள் கண்கள் ஒரு கணம் ஓய்வெடுத்தன.


 குஷன் செய்யப்பட்ட இருக்கையில் அமர்ந்து சற்று எழுந்து அவள் அதை ரசிப்பதைக் கண்டோம்.


 பணியாளர் 

இரண்டு பெரிய  

 கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த நீரை அவர்கள் முன்பு வைத்தார்.


 அவர், தனது மகளுக்கு ஒரு மசாலா தோசை கூறினார்.  

அவன் அதைக் கேட்டதும், அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மீண்டும் பிரகாசமாகியது.


 உங்களுக்கு என்ன வேண்டும்?  என்று பணியாளர் கேட்டார்.


 எனக்கு எதுவும் தேவையில்லை.,

அவர் பதிலளித்தார்.


 சற்று நேரத்தில், 

சட்னி மற்றும் சாம்பருடன் ஒரு சூடான, காரமான மசால் தோசை வந்தது,


 சிறுமி தோசை சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தாள், அவர் அவளை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே குளிர்ந்த நீரைப் பருகினார்.


 பின்னர் அவரது அலைபேசி ஒலித்தது.   

 அது பழைய மாடல்.   மறுபக்கம் அவரது நண்பர் என்று தோன்றியது.  


இன்று தனது மகளின் பிறந்த நாள் என்றும் தான் அவளுடன் ஹோட்டலில் இருப்பதாகவும் கூறினார்.


 பள்ளியில் 

முதல் இடத்தை வென்றால், 

பிறந்த நாளன்று  

 ஹோட்டலில் 

மசாலா தோசை 

வாங்கித் தருவதாக  முன்பு உறுதியளித்திருந்ததாகவும், தற்போது 

மகள் முதல் இடத்தை வென்றதால் 

இப்போது 

தனது வாக்கினை நிறைவேற்றிக் கொண்டிருப்பதாகவும்  

 கூறினார்.


 (அவர் பேசியது தெளிவாகக் கேட்டது)…


 இல்லை, நாங்கள் இருவரும் எப்படி 

சாப்பிட முடியும்?  


 என்னிடம் அவ்வளவுதான் 

பணம் இருக்கிறது?  

சில நாட்களாக எனக்கு எந்தக் குறிப்பிடத்தக்க வேலையும் இல்லை., வீட்டில் என் மனைவி தயாரித்த சாப்பாடு  உள்ளது. 

எனக்கது போதும்.


 எனக்கு முன் நிகழ்ந்த அக் காட்சியையும், உரையாடலையும் கேட்டுக் கொண்டிருந்த நான்,என் உதடுகளுக்குக் கொண்டு வந்த சூடான தேநீரில் எனது நாக்கு எரிந்தபோது அவர்களிடமிருந்து  

கண்கள் அகன்றன. 


 யாரும் பணக்காரரோ அல்லது ஏழையோ...  

 தனது குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வர் என்பதை 

நான் உணர்ந்தேன்.


 நான் எழுந்து கவுண்டருக்குச் சென்று எங்கள் ஐஸ்கிரீம் மற்றும் தேநீருக்கான பணத்துடன் மேலும் இரண்டு மசாலா தோசைகளுக்கான பணத்தையும் கொடுத்தேன்.


 அந்தத் தந்தையையும் மகளையும் சுட்டிக்காட்டி மெதுவாகக் கடைக்காரரிடம் கூறினேன்.


 'அந்த மனிதருக்கு இன்னொரு தோசை கொடுங்கள், 

அவர் பணத்திற்குச் சொன்னால்,

' இன்று உங்கள் 

மகளின் பிறந்தநாள், அவள் பள்ளியில் 

முதல் இடத்தைப் பெற்றிருக்கிறாள், எனவே ஹோட்டல் நிர்வாகம்  உங்கள் மகளுக்குத் தரும் பரிசு இது.  


இதை இன்னும் சிறப்பாகப் படிப்பதற்கு நாம் ஊக்குவிப்பதாகக் கருத வேண்டும். 


 அவருக்கு இலவசம் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், 

அது அவரது நல்ல மனதுக்கு வேதனையைத் 

தந்து விடும். "


 ஹோட்டல் உரிமையாளர் புன்னகைத்து, 

"இந்தப் பெண்ணும் அவளுடைய தந்தையும் இன்று எங்கள் விருந்தினர்கள். அவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. 


இந்தப் பணத்தை 

வேறு சில தொண்டு நிறுவனங்களுக்கும் அல்லது இது போன்ற பிற சேவைக்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்."


 பணியாளர் மற்றொரு தோசை மேசையில் வைத்தார்., 

நான் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

 சிறுமியின் தந்தை திடீரென்ற அதிர்ச்சியில் அவரிடம், "நான் 

ஒரு தோசைதான் சொன்னேன், 

எனக்கு இது தேவையில்லை" 

என்று கூறினார்.


 பின்னர் ஹோட்டல் உரிமையாளர் அருகில் சென்று, “உங்கள் மகள் பள்ளியில் 

முதல் இடத்தில் வந்ததற்கான 

எங்கள் பரிசு,

 உங்கள் இருவருக்கும், மசாலா தோசை ஹோட்டலின் இன்றைய ஸ்பெஷல். '


 தந்தையின் கண்கள் விரிந்தன, 

அவர் தனது மகளை நோக்கி, 

"பார் மகளே! 

நீ கடினமாகப் படித்தால் வாழ்க்கையில் இது போன்ற இன்னும்  பல பரிசுகளைப் பெறலாம் என்றார்."


 அவர் ஒரு பேக் பண்ண முடியுமா என்று பணியாளரிடம் கேட்டார்.  தான் அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று தனது மனைவியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், 

அதைச் சாப்பிட அவருக்கு வாய்ப்புக் கிடைக்காது என்றும் கூறினார்.


 "இல்லை,  நீங்கள் அதை இங்கேயே சாப்பிடலாம். வீட்டிற்கு  நான் இன்னும் 3 தோசையும் 

ஒரு இனிப்புப் பொதியும் பேக்செய்கிறேன்."


 இன்று நீங்கள் வீட்டிற்குச் சென்று உங்கள் மகளின் பிறந்தநாளை மிகுந்த மகிழ்ச்சியுடனும் இனிப்புகளுடனும் கொண்டாடுங்கள்,

 அவளுடைய நண்பர்களை அழையுங்கள்., 

அதில் எல்லா மிட்டாய்களும் இருக்கும். '


 இதையெல்லாம் கேட்டபோது, ​​

என் கண்களில்,  

 ஆனந்தக் கண்ணீர். 


ஒரு நல்ல செயலைச் செய்ய ஒரு சிறு முயற்சி எடுத்தாலும்,

 நம்முடன் சேர பல மனிதாபிமானமுள்ளவர்கள் உடன் முன்வருவார்கள் என்பதை உணர்ந்தேன்.


  நன்றி.

Saturday, 19 September 2020

 நாம் கடவுளுக்கு படைக்கும் உணவை அவர் அருந்துகிறாரா இல்லையா? என்ற சந்தேகம் சிலர் மனதில் எழுவதுண்டு.


 அதே சந்தேகம் ஒரு சிஷ்யன் மனத்திலும் எழுந்தது. 


இதற்கான விடையை உடனே தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்த அவன், தன் குருவிடம் சென்றான்.


“குருவே, நாம் கடவுளுக்காக படைக்கும் நைவேத்யத்தை அவர் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 


இறைவன் அதை சாப்பிட்டால் நைவேதியத்தின் அளவு குறையவேண்டும் அல்லவா?


 பிறகு எப்படி அதை கடவுள் சாப்பிட்டார் என்று நம்புவது? என்று கேட்டான்.


குரு அவனை ஊடுருவி பார்த்துவிட்டு, மெளனமாக சிரித்தபடியே,


 ’நமது வேதாந்த வகுப்பிற்கு நேரமாகிவிட்டது. ஆகையால் இப்போது நீ வகுப்பறைக்கு செல் நான் சிறிது நேரத்தில் வருகிறேன்” என்றார்.


வகுப்பறையில் அன்று அனைவருக்கும் ஒரு அற்புத மந்திரத்தை பற்றி விளக்கினார்


 குரு. பிறகு அணைத்து மாணவர்களும் அதை மனதில் பதியவைக்க துவங்கினர்.


 சிறிது நேரம் கழித்து, தன்னிடம் படையலை பற்றி கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.


குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான் சிஷ்யன்.


 “எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார் குரு.


 என்றும் மறவாதபடி முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே” என்றான் சிஷ்யன். 


அப்படியா சரி, எங்கே ஒருமுறை அந்த மந்திரத்தை என்னிடம் சொல் பார்க்கலாம் என்றார்.


மனதை ஒருநிலை படுத்திகொண்டு மந்திரத்தை உச்சரிக்க ஆரமித்தான் சிஷ்யன். 


அவன் கூறி முடித்தவுடன், சிஷ்யா நீ மந்திரத்தை சரியாக உள்வாங்கிக்கொண்டதுபோல் தெரியவில்லையே. உன் புத்தகத்தை காட்டு பாப்போம் என்றார் குரு.


பதட்டம் அடைந்த சிஷ்யன் உடனே தன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தான்.


 நான் கூறியதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னியுங்கள் குருவே. அனால் இந்த புத்தகத்தில் உள்ளபடியே தான் நான் மந்திரத்தை கூறினேன் என்றான்.


இந்த புத்தகத்தில் இருந்து தான் மந்திரத்தை உள்வாங்கினாயா என்றார் குரு. ஆம் குருவே என்றான் சிஷ்யன்.


 அப்படியானால் நீ உள்வாங்கிய பிறகும் இதில் மந்திரம் இருக்கிறதே எப்படி? 


நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் அது இருக்க கூடாதல்லவா? என்றார் குரு. 


சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.


நீ மனதில் உள்வாங்கிய மந்திரம்  சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். 


இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். அவனுக்கு நாம் ஸ்தூல வடிவில் படைக்கும் நைவேத்யத்தை அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான்.


 அதனாலேயே அதன் அளவு குறைவதில்லை.


உதாரணத்திற்கு இப்போது நீ உள்வாங்கியதால் புத்தகத்தில் இருந்த மந்திரத்தின் அளவு குறையவில்லை அல்லவா அதுபோல தான் என்றார் குரு.


 இந்த அற்புத விளக்கத்தை கேட்டு சிஷ்யன் மெய் சிலிர்த்துபோனான்.

 என்ன செய்வேன்

  ஏதும் அறியவில்லையே?

                ******

   மருந்தறியேன் மணியறியேன்

மந்திரம் ஒன்றும் அறியேன்

   மதியறியேன்  விதியறியேன்

வாழ்க்கை நிலையறியேன்


     திருந்த அறியேன்

  திருவருளின் செயலறியேன்

    அறம்தான் செய்தறியேன்

  மனம் அடங்கும் திறத்தினில்

ஓரிடத்தே இருந்தறியேன்

   அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்.

      

    எந்தை பிரான் மணிமன்றம்

       எய்த அறிவேனோ...

  இருந்த திசை சொல்ல அறியேன்

     எங்ஙனம் நான் புகுவேன்.


யார்க்கு உரைப்பேன் ?

      என்ன செய்வேன்.

ஏதும் அறிந்திலேனே...?

௭ன் தெய்வமே சங்கரா🙏🙏🙏

ஹர ஹர சங்கர!!!

ஜெய ஜெய சங்கர !!!

Monday, 7 September 2020

 ௭ன் தெய்வமே சங்கரா.. 

௭ங்களை செயலற்றவன்

ஆக்கிவிடாதே. 

நடை பிணமாக நின்று

நட்ட கல்லாக நின்று

விதி முடிந்த ௮ன்று 

கட்டையை விட்டு விட்டு,

 ஓடுகிற உயிராக ௭ங்கள் உயிரை

ஆக்கி விடாதே. 

யாருக்கு என்ன செய்ய வேண்டுமோ

௮தை நாங்கள் செய்து விடுகிறோம். 

௭ங்களை தூற்றியவர்களையும் கூட

மறந்து ௮வர்கள் நலமாக வாழ பிரார்த்தனை செய்து கொள்கின்றோம்... 

   சங்கரா ௭ங்கள் தெய்வமே

ஒளி மிகுந்த கண்களையும்

௨ற்சாக மிகுந்த ௨ள்ளத்தையும்

ஆரோக்கியமான உடலையும் ௭ங்களுக்கு கொடு. ௭ப்போதும் சுறுசுறுப்பாகவும்,கலகலப்பாகவும்

இருக்கக் கூடிய மான்குட்டியின் உடலை ௭ங்களுக்கு கொடு.

கொடிய நோயின் ௨பாதை ௭ங்களை வெறும் கூடுகளாக்கி விடாதவாறு ௭ங்களை காப்பாற்றும் ௮ய்யனே...

ஹர ஹர சங்கர🙏🙏🙏

ஜெய ஜெய சங்கர🙏🙏🙏

Wednesday, 22 April 2020



மனிதன் செய்த
செயற்கை தவறுகளுக்கு
தன்னைத் தானே
சரிசெய்து கொள்கிறது இயற்கை🧚‍♂

அசுத்தம் கொட்ட
மனிதர்கள் இல்லையே
அழுக்கு தேய்த்து
குளித்து கொண்டது கங்கைநதி🏊‍♂

கூட்டம் போட
கட்சிகள் இல்லையே
கோடம்பாக்கத்தில்
ஊர்வலம் போயின
குயில்கள்😍

கூச்சல் போடும்
வாகனம் இல்லையே
கோயம்பேட்டில்
டூயட் பாடின குருவிகள்💗

பகலெல்லாம் பிள்ளைகளை
சிரிக்க வைக்க
வடிவேலு😁

இரவெல்லாம் இதயங்களை
உறங்க வைக்க
இளையராஜா🎸

வீட்டுக்குள்ளேயே
வாழ்வது ஒன்றும்
அத்தனை கடினமில்லை

சூழலும் பம்பரத்தை
கையில் ஏந்தி காட்டி,
கோலி குண்டுகளை
குறி வைத்து அடித்து காட்டி,
காரம் தூக்கலாக
கறி குழம்பு செய்து காட்டி

'அப்பா சூப்பர் மா'
என குழந்தையிடம்
வாங்கிய பட்டம்
1000 apraisalகளுக்கு சமம்🏆

வீடு கிடக்கட்டும்
நாடு என்ன செய்கிறது?

செய்தி சேனல்களை
பலமுறை பார்த்துவிட்டேன்.
கொலை கொள்ளை கற்பழிப்பு
எதுவும் இல்லை

சட்டம் தராத பயத்தை
சாவு தானே தருகிறது🌚

தலைக்கவசம்
அணியாத மூடர்களை
முகக் கவசம் அணிய வைத்த முற்போக்குவாதி
இந்த Corona✳

இளசுகள் மூளையை கழுவி
சண்டைகள் மூட்டும்
சாதி சங்கமுட்டாள்களின்
கைகளை முதலில் கழுவ சொன்ன மருத்துவன்
இந்த Corona👨‍🔬

இந்த தேசத்தில்
இரண்டு மக்கள்தான்.

அடுத்தவேளை
சாப்பாட்டுக்கு
எதை செய்யலாம்?

அடுத்தவேளை
சாப்பாடு இல்லையே
என்ன செய்யலாம்?

பால் கொண்டு Dolgona காபி
எப்படி செய்வது?

பாலுக்கு அழும் குழந்தைக்கு
சமாதானம் எப்படி செய்வது?

இருவருக்கும் சேர்த்தே
பிறந்துள்ளது சித்திரை திருநாள்😎

இந்த நன்னாளில்
கோயில்கள்
மூடிவிட்டால்
என்ன???

தெய்வங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்
மருத்துவமனையில்👨‍⚕

சர்ச்சுகள்
மூடிவிட்டால்
என்ன???

ஒவ்வொரு தெருவையும்
காத்து நிற்கிறார் கர்த்தர்
காக்கிச் சட்டையில்⛪

பள்ளிவாசல்கள்
மூடிவிட்டால்
என்ன???

மூடப்படாத மளிகை கடையின்
ஒவ்வொரு அரிசியிலும்
ஏழைகளின் பெயரை எழுதி வைத்துள்ளான்
எல்லாம் வல்ல இறைவன்🕋

நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.

மனித இனமே
நினைவு சின்னங்களில்
மட்டும்
இல்லை கடவுள்.

குப்பை அள்ளும் கரங்களில்,
தண்ணீர் கேன்போடும் வாகனங்களில்,
விதைப்பை நிறுத்தாத
விவசாயியின் வியர்வையில்,
விலையேற்றம் செய்யாத
வியாபாரி நேர்மையில்,
குழந்தைகள் கொஞ்சும்
மொட்டை மாடியில்,
நலம் விசாரிக்கும்
நண்பனின் குரலில்❤

எங்கெல்லாம் நம்பிக்கை வேர் உள்ளதோ அங்கெல்லாம் ஆண்டவனின் பேர் உள்ளது.

இன்றோ நாளையோ
நோய்க்கு மருந்து வரும்
ஊரடங்கு முடிந்துவிடும்.

வீட்டில் இருந்து
விடுதலை அடையும் திருநாளில்
என்ன செய்வேன் நான்?

மால்களுக்கு ஓடமாட்டேன்
மந்தையாக மாற மாட்டேன்
ஆழமாய் தினம் மூச்சு எடுப்பேன்
அன்னையிடம் பேச்சுக் கொடுப்பேன்🤰

அன்றாட சுமைகளில்
மனைவிக்கு தோள் கொடுப்பேன்
மனிதகுலம் சார்பாக
மருத்துவர்களுக்கு கை கொடுப்பேன்🥰

சில்லறைகள் மட்டுமல்ல
சிரிப்புகளும் சேகரிப்பேன்
தொல்லைகள் தந்தாலும்
பிள்ளைகளை
காதலிப்பேன்👶

புத்தாண்டோ
பிறந்தநாளோ தேவையில்லை
உயிரோடு வாழ்கின்ற
ஒவ்வொரு நாளையும்
கொண்டாடுவேன்🥳

வாகனத்தில் செல்லும்போது
வீதியிலே சாமி கண்டால்
கையெடுத்து வணங்குதல் போல்

காவிரி வைகை தாமிரபரணி
நெடுஞ்சாலை நெடுக
நிரம்பிய இயற்கையை
கையெடுத்து
கும்பிடுவேன்🗻

கோடையிலும் கொஞ்சமாக
கொட்டிபோன மழையின்பின்
கையளவு மண் எடுத்து
கன்னத்தில் பூசிக் கொண்டு
கண்ணீரில் சிரித்தபடி
உரக்கச் சொல்வேன்
உலகிற்கு

"நண்பா..
வாழ நினைத்தால் வாழலாம்.

வழியா இல்லை பூமியில்?"

Saturday, 1 April 2017

கோபப்படுவதில் பயனில்லை

நீங்கள் நேர்மையாக இருந்தால் கோபப்படுவதில் பயனில்லைஒருவேளை நீங்கள் தவறாக இருந்தால் கோபப்படுவதற்கு தகுதி இல்லை

Sunday, 29 January 2017

தீயநட்பு வேண்டவே வேண்டாம்

அறிவாளியின் நட்பு, உறவினர்களைக் காண்பதைப் போன்று
இன்பத்தை அளிக்கும். மூடர்களுடைய நட்பு பகைவனுடைய
கூட்டுறவைப் போல துன்பம் தரும்.
நல்ல அறிவும், நல்லொழுக்கமும் உடைய தீமைகளைக் களைந்து
நிதானமாக வாழ்கிற நண்பர் ஒருவர் உனக்குக் கிடைப்பாரானால்
விருப்பமோடு அவருடன் கலந்து பழகு.
எதிரிக்கும் நண்பனாய் இரு. தேவைக்கு உதவி செய்.
அறிவாளியாயும், ஒத்துப் போகக்கூடியவனாயும், அடக்கமும்,
நல்லொழுக்கமும் உடைய ஒரு தோழன் கிடைப்பானாகில் எல்லா
இடையூறுகளையும் கடந்து அவனுடன் கருத்துடனும்
மகிழ்ச்சியுடனும் நட்புக் கொள்ள வேண்டும்.
மூடனின் நட்பைப் பெறுவதனைக் காட்டிலும், ஒருவன் தனியே
வசிப்பது நல்லது. அவனது நட்பு பாவ காரியங்களைச் செய்ய
வைக்கும்.
முட்டாள்களுடன் ஒட்டி வாழ்வதைக் காட்டிலும் தனிமையாய்
வாழ்வதே சிறந்தது. மடையர்களின் நட்பில் வாழ்பவர் அதிக
காலம் துன்புறுவார்கள். மடையர்கள் நட்பு எதிராளியின் நட்பை
விட மிகுந்த வேதனை அளிக்கும். தீய நட்பும், வீணருடன்
உறவும் வேண்டாம். நல்லாரோடு இயங்கிப் பெரியோரைத்
துணைக்கொள்.
உங்களுக்கு உபதேசிக்கப்பட்டுள்ளது என்பதற்காகவோ,
சம்பிரதாயமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதாலோ, உங்கள்
கற்பனையே ஒட்டியது என்பதாலோ எதையும் நம்பாதீர்கள். குரு
போதிப்பதை நீங்கள் அவரிடம் கொண்டுள்ள மதிப்பின் காரணமாக
மட்டும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். எந்தச் செயலையும் நன்கு
ஆராய்ந்து எது எல்லாப் பிறவிகளின் நன்மைக்கும், நலனுக்கும்
உகந்தது நல்லது என்று தெரிந்தால், அதை உறுதியாய்
கடைப்பிடியுங்கள்.

Friday, 11 November 2016

வெற்றியின் ரகசியம்


நோக்கம் எதுவென்பதை முதலில்  தீர்மானி .
அதுவே  இலக்கு  என்பதை உறுதி செய்துகொள்.
கையில் பணமில்லையே ... உடலில் வலுவில்லையே...
உதவி செய்ய நண்பர்கள் இல்லையே ...
என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே.
எதற்கும் பயப்படாதே ... தயங்காதே...!
இலக்கை நோக்கி அடியெடுத்து வை.
தொடர்ந்து முன்னேறு.
சோதனைகள் விலகும் . பாதை தெளிவாகும்.
நோக்கத்தை அடைந்தே தீருவாய்.
அதை யாராலும் தடுக்க முடியாது.

நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
​​

நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்

மனதிற்கு அடிமையாகும் மனிதன் மிருகமாகிறான் அதே மனம் மனிதனுக்கு அடிமையாகும் போது அவனே தெய்வமாகிறான்

  மனமும் மனதின் என்ணுகளுமே எல்லா செயல்களுக்கும் காரணமாக அமைகின்றன

மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறேன்

ஆதலால் உங்கள் மனமாகிய கோவிலில் எண்ணமாகிய கடவுளை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள் நல்லவற்றையே சிந்தனை செய்யுங்கள்

நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் 


திருவினை வென்று வாழ்!


நற்செயல்களை செய் அதற்கான பலனை எதிர்பார்க்காதே அதன் பலன் எந்த வழியிலும் உன்னை வந்து சேரும் என்றென்றும் உன் பெயரை நிலைத்து நிற்க செய்யும்


உங்கள் மனச்சாட்சிக்கு நீங்கள் உண்மையுள்ளவராக இருந்தால் உங்கள் வாழ்வில் உங்களைப் போல சந்தோஷமான மனிதன் வேறு யாரும் கிடையாது


பொறாமை என்பது அடிமைகளின் சாபக்கேடு அதை எப்போதும் தவிர்த்திடுங்கள் எல்லா ஆசிகளும் வெற்றிகளும் உங்களை வந்தடையும்


நல்லது அல்லது கேட்டது என்று எதுவும் இல்லை நமது எண்ணமே ஒரு விஷயத்தை அவ்வாறு மாற்றுகின்றது


நிச்சயம் நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்

Tuesday, 4 October 2016

நல்லதோ தீயதோ  ஒரு செயலைச் செய்த பின்பு ,மீண்டும் அதை பற்றி நினைக்காதே.செய்தது செய்தாகிவிட்டது  முடித்ததைப் பற்றி சிந்திக்காதே .மூட நம்பிக்கைகளை தூக்கி எரி,எதிரில் மரணமே வந்தாலும் பலவீனத்திற்கு இடம் கொடுக்காதே .நடந்ததை எண்ணிக் கலங்காதே . உன் நற்செயல்களையும் கூட  நினைவில் வைக்காதே. சுதந்திரமாக இரு...

Wednesday, 10 August 2016

வாழ்க்கை தத்துவம்


இந்த உலகில் மகிழ்ச்சி என்பது எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலானோர் ஏதோ ஒன்றை பறிகொடுத்தது போல எந்த நேரமும் சோகத்துடன் இருக்கிறார்கள். இவர்களின் சிந்தனையும் எப்போதும் எதிர்மறையாகவே இருக்கிறது. எதிர்மறையாகச் சிந்திபவர்கள் எந்த ஒரு செயலிலும் வெற்றி அடைய வெகுநாட்கள் ஆகும். சிலர் மட்டுமே சந்தோஷத்துடன் வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். அவர்கள் எதிர்மறையான எண்ணங்களை ஆக்கமுள்ளதாக மாற்றிக் கொண்டதே அதற்குக் காரணம்.   `ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்றார் புத்தர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கிறது. ஆனால், அந்த ஆசை நிறைவேறியவுடன் நாம் ஆசைபடுவதை நிறுத்திக் கொள்வதில்லை. வேறொன்றின் மீது நம் ஆசை திரும்புகிறது. நடந்து செல்லும்போது சைக்கிள் வாங்க வேண்டும் என்று தோன்றுகிற ஆசை, அது நிறைவேறியவுடன் `பைக்’ மீது திரும்புகிறது. அது நிறைவேறியவுடன் கார் என இப்படியாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எப்போது நம்மிடம் இருக்கின்ற பொருள்களைக் கொண்டு திருப்தியடைகிறோமோ, அப்போதுதான் வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தோன்றும்.   வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. சில நேரம் வெற்றி கிடைக்கும். சில நேரம் தோல்வி கிடைக்கும். தோல்வியடையும் சமயங்களில், `நான் எப்போதும் தோல்வியையே சந்தித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று புலம்பி அடுத்தகட்ட முயற்சியைக் கைவிட்டு விடுகிறார்கள். இதற்குக் காரணம் `நம்மால் முடியாது’ என்ற எண்ணமே. முதலில் அந்த எண்ணத்தைத் தூக்கி போட்டுவிட்டு, உங்களின் கடந்த கால வெற்றிகளை ஒரு தாளில் எழுதிக்கொண்டே வாருங்கள். நீங்கள் பெற்ற வெற்றியின் சாதனைபட்டியல் உங்களை அடுத்த வெற்றிக்கு அழைத்துச் செல்லும்.   ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் உயர்ந்தவராக இருப்பார். அழகு, படிப்பு, குணம், திறமை, செல்வம் இதில் ஒன்றோ அல்லது இரண்டோ ஒருவரிடம் இருக்கலாம். அதற்காக அந்தத் தகுதி நம்மிடம் இல்லையே என மற்றவரை ஒப்பிட்டு பார்த்து தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. நாமே சிறந்தவர் என உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டும். உங்களுடைய சாதனைகள், வெற்றிகள் சிறியதாக இருந்தாலும் அதை எண்ணி பெருமைபட வேண்டும். அதற்காக தற்பெருமைடன் திரியக் கூடாது.   வாழ்க்கையில் எல்லா மனிதர்களுக்கும் சந்தோஷமான சம்பவங்களும் உண்டு, கசப்பான சம்பவங்களும் உண்டு. கசப்பை ஜீரணித்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. `எனக்கு மட்டும் ஏன் எல்லாம் தப்பாகவே நடக்கிறது?’ என்று எண்ணி, அதிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்கள் பலர். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை. அதை புரிந்து கொண்டு வெற்றிக்கான தேடலைத் தொடங்குங்கள்.   மற்றவருடைய வளர்ச்சியை பார்த்து சந்தோஷபடுபவர்களை விட, பொறாமைபடுபவர்களே அதிகம். ஒருவரை அழிக்கும் மிகபெரிய ஆயுதம் அவரிடம் உள்ள பொறாமைக் குணம்தான். ஒருவருடைய வெற்றியில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அவரை பார்த்து பொறாமைபடத் தேவையில்லை. அவரை பாராட்டி ஊக்கபடுத்துவதன் முலம் நாமும் முன்னேற முடியும். இப்படிச் செய்வதால் அவர் பெற்ற வெற்றி ஒருநாள் உங்கள் பக்கமும் திரும்பும். அதேநேரம் உங்களைவிடவும் அதிகமானோர் இன்னும் மேலே வர முடியாமல் இருக்கின்றனர் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.   ஒருவருடைய வெற்றியை பார்த்து பொறாமைபடுவதை விட, அந்த வெற்றியை நாமும் அடைய முயற்சி செய்வது தான் சரியான வழி. அனுபவம் இல்லாமல் திடீரென ஒரு செயலில் இறங்கினால் தோல்விதான் கிடைக்கும். எனவே, பிறருடைய வெற்றியில் பங்கு கொண்டு, அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் புதிய முயற்சிகளை மேற்கொண்டால், சரியான வாய்புகள் வரும்போது வெற்றியை அடையலாம். ஒரே குறிக்கோளை அடைய எண்ணி இருவர் முயற்சி செய்யும்போது ஒருவரை மற்றவர் ஊக்கபடுத்தினால் வெற்றியின் இலக்கை விரைவில் அடையலாம்.   எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்து வருபவர்கள், தன்னை பற்றி ஒருபோதும் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கக் கூடாது. இதனால் நல்ல விமர்சனங்களை உருவாக்கக் கூடிய வாய்புகளை அவர்கள் இழக்கக் கூடும். எனவே, எதிர்மறையான விமர்சனங்களை எண்ணி நேரத்தை வீணாக்காமல், நல்ல விமர்சனங்களை உருவாக்குவதில் நேரத்தைச் செலவிடுங்கள். பிறருடன் ஆக்கபூர்வமாக பேசுவதே உங்களை பற்றிய நல்ல எண்ணத்தை பிறரிடம் ஏற்படுத்துவதுடன், நீங்களே உங்களை பற்றி உயர்வாக உணரவும் வழிவகுக்கும்.   எந்த ஒரு செயலையும் சிறப்பாகச் செய்ய அர்பணிப்பும், தெளிவான குறிக்கோளும் அவசியம். முதலில் உங்களுடைய குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை அடைவதற்கான வழிகளைக் கண்டுபிடிங்கள். அதற்காக உங்களின் சக்தி முழுவதையும் செலவழிங்கள். உங்களுடைய வாழ்க்கையையே அர்பணியுங்கள். அந்த செயலில் தோற்றால் அதிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள். வெற்றி பெற்றால் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதையும் தாமதிக்காமல் உடனே செய்யுங்கள்.   பிறருடைய வெற்றியில் இருந்தோ அல்லது தோல்வியில் இருந்தோ உங்களுக்குத் தேவையானதை கற்றுக் கொள்ளுங்கள். அதிலிருந்து உங்களுக்குக் கிடைக்கும் வாய்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன? எந்த விஷயங்களை புதிதாக சேர்த்துக் கொண்டார்? எந்த விஷயங்களை தம்மிடம் இருந்து விலக்கி வைத்தார்? போன்ற விஷயங்களை வெற்றி பெற்றவரிடம் இருந்தும், என்ன காரணத்திற்காகத் தோல்வியைத் தழுவினார் என்பதை தோல்வி அடைந்தவரிடம் இருந்தும் தெரிந்து கொள்ளுங்கள்.




வாழ்க்கை என்பது என்ன?

இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன?
– உயிரோடு இருப்பதா?
– மகிழ்ச்சியாக இருப்பதா?
– பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?
– தோல்விகளில் கற்றுக் கொள்வதா?
– வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?
– தன்னலமற்ற அர்ப்பணிப்பா?
– தத்துவங்களின் அணிவகுப்பா?
…. இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான்.
இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.
தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன..? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.
அப்படி ஒரு விஷயம் இருக்கிறதா…? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுப வங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங் களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண் டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக் கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.
ஒரு ஜெர்மனிய பழமொழி, “அனுபவம் என்ற பள்ளியில் மூடன் எதையும் கற்றுக் கொள்ளமாட் டான்” என்கிறது. அப்படி கற்றுக் கொள்ளாதவரை வாழ்க்கை அவனுக்கு வசப்படாது.
மற்ற உயிரினங்களிலிருந்து மனிதன் பல விதத்தில் மாறுபடுகிறான். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வதில், தன் தேவைகளை தானே தேடி பூர்த்தி செய்து கொள்வதில், நன்மை- தீமைகளை பகுத்தறியும் விதத்தில் பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதில்..! இத்தனை யும் பெற்று, சிந்தித்து செயல்படும் திறன் பெற்றிருக்கும் மனிதன், சில நேரங்களில் மிருகத்தை விட கீழ்நிலைக்கு வந்து விடுகிறான். போகும் திசை தெரியாமல் மயங்கி நிற்கிறான். அப்போது தான் வாழ்க்கையில் பயம் ஏற்படுகிறது.
துன்பம் துரத்தும் போது ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.
நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.
இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.
சூரியன் உயிர்களை வளர்க்கிறது. காக்கிறது. அது இல்லாத நேரத்திலும் உயிர்கள் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஆனால் இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போது தான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?
உங்களுடைய வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தேவையான முன் உதாரணம் இருக்க வேண்டும். தோல்விகளை தாண்டி வெளிவந்தால் தான் அங்கே வெற்றி நம்மை வரவேற்க காத்திருக்கும். வெற்றிக்காக உழைக்கிறோம். தோல்வி நம் முன்வந்து நிற்கும் போது துவண்டு போகிறோம். தோல்வி தான் முதலில் வரும். அது உலக இயல்பு.
தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.
இன்று பல்வேறு சூழலால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். நாம் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற தத்துவம் அவர்களுக்கு புரிவதில்லை.
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும். நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறிவிடுவோம்.
– நம்மைவிட உடலில் பலசாலி யானை
– நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை
– நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.

வாழ்க்கையில் வெல்ல `6′


“தடம் பார்த்து நடப்பவன் மனிதன், தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்” என்று சொல்வார்கள். எல்லோருக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும், மற்றவர்கள் நம்மை விரும்ப வேண்டும் என்ற எண்ணமும் இருக்கத்தான் செய்யும். வெற்றிக்கு முயற்சியும், தன்னம்பிக்கையும் போதும். வெற்றி பெற்றால் மற்றவர் உங்களை திரும்பி பார்க்கலாம், ஆனால் எல்லோரும் உங்களை விரும்பியும், நெருங்கியும் வர வேண்டுமென்றால் 6 அடிப்படை விஷயங்கள் அவசியம். அவை இங்கே…
நம்பிக்கை:
நம்மிடம் இருக்கும் சிறந்த பழக்க வழக்கங்களே பிறரை நம்மை நோக்கி ஈர்க்கும். முதலில் நமக்கு நம் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். நான் அழகானவ(ன்)ள் என்ற எண்ணம் உங்கள் மனதில் எப்போதும் இருக்கட்டும். அழகு என்பது சருமத்தில் மட்டுமில்லை. சருமத்தை பராமரித்து அழகு படுத்திவிடலாம். கவர்ச்சியை விட நம்பிக்கை மேலானது. நம்பிக்கையின் பலனையும், ஈர்ப்பையும் உங்கள் வெற்றி தான் மற்றவர்களுக்கு உணர்த்தும்.
நேர்த்தியான உடை:
`நான் கலராக இல்லை. எலும்பும் தோலுமாக இருக்கிறேன். எனக்கு எந்த டிரெஸ் போட்டாலும் நல்லா இருக்காது` என்று எண்ணாதீர்கள். நேர்த்தியாக உடை அணியுங்கள். உடை அணிவது ஆளைக் கவர்வதற்கல்ல என்றாலும், பார்ப்பவர்களை மதிக்கத் தூண்டுவதும் நாம் அணியும் உடை தான். அது உங்களுக்கு வசதியானதாகவும் இருக்கட்டும். நல்ல மரியாதை, நல்ல நட்பு எல்லாவற்றையுமே நல்ல ஆடைகள் உருவாக்கித் தரும். நேர்த்தியான ஆடை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கனிவான பழக்கம்:
வீட்டுக்குள்ளேயே கிணற்றுத் தவளையாக முடங்கிக் கிடந்தால் இந்த உலகத்தின் அதிசயங்கள் உங்களுக்கு தென்படாமலே போகும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் தான் வெற்றியின் முகம் உங்களுக்கு காட்சி தரும். எனவே ஓய்வு நேரத்தை நண்பர்களுடன் இணைந்து சமூக சேவை செய்யும் விதமாக வெளியே கழித்தால் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்போது உங்களுக்கு புதிதாக பலர் அறிமுகமாகலாம். நீங்களும் முதலில் உங்களை அறிமுகம் செய்து பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பழக பழகத்தான் நம் பலமும், பலவீனமும் தெரியும். பிறகு நம் நடையை மாற்றி வெற்றி நடை போடலாம்.
நட்பை தேர்வு செய்யுங்கள்:
வெற்றிக்குத் துணை நம்பிக்கை மட்டுமல்ல, நட்பும் தான். யாருடன் சினேகிதம் கொள்கிறோமோ அவர்களின் பழக்கம் நமக்கும் ஒட்டிக் கொள்ளும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதனால் நட்பு கொள்வதில் அதிக கவனம் அவசியம். அதேபோல அருகில் இருப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் ஆகியோருடன் நட்புறவுடன் இணக்கமாக பழகுவதும் வாழ்க்கையில் வெற்றிக்கு உதவும். உங்களின் அழைப்பை மதிப்பவருடனும், மரியாதையுடன் பழகுபவருடனும், உங்கள் நலனில் அக்கறை கொள்பவருடனும் நட்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள்:
நீங்கள் நிறைவான தோற்றத்தில் இருக்கும்போது பலரும் உங்களைப் பற்றி பேசிக் கொள்வார்கள். அதுபோல குறையான தோற்றத்தில் இருந்தாலும் பலரும் விமர்சிப்பார்கள். புகழ் பேச்சில் மயங்காமலும், குறை காணும் விமர்சனங்களில் கலங்காமலும் இருங்கள்.
விலக்க வேண்டியவை:
வெற்றிக்காக விலக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. முதலாவது எதிர்மறையாக பேசுபவர்களை விட்டு விலகுங்கள். அடுத்ததாக நேரத்தையும், செல்வத்தையும் விரயம் செய்யும் பழக்கத்தை விட்டுவிடுங்கள். நண்பர்களுடன் அதிகமாக அரட்டையடிப்பது, தூங்கிக் கழிப்பது, தியேட்டரில் கழிப்பது போன்றவற்றை விலக்குவதன் மூலம் நேரத்தையும், செல்வத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த ஆறும் இருந்தால் வெற்றி உங்களைச் சேரும், மற்றவர்களும் உங்களிடம் விரும்பி நட்பு பாராட்டுவார்கள்.

உங்கள் பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்


உலகில் உள்ள மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமானவர்கள். அடிப்படையில் மனிதர்களின் குணங்கள் வேறுபட்டிருக்கும். பார்வையில், கொள்கையில், ரசனையில், பேச்சில், நடத்தையில், என்று எல்லாமே ஒன்று போல் இருப்பதில்லை. நாம் எல்லோரும் ஒரே மாதிரியானவர்கள் என்றால், ஏன் வெவ்வேறு விதமான உடைகள் உருவாக்கபடுகின்றன? வெவ்வேறு சுவை உணவுகள் சமைக்கபடுகின்றன… வெவ்வேறு கலைகள் உருவாக்கபடுகின்றன?!
நாம் விரும்பும் ஒரு விஷயம்… அடுத்தவருக்கு வெறுபாய் அமையும். ஒருவரின் தனித்தன்மை அடுத்தவரிடம் இருப்பதில்லை. தம்முடைய பலம் மற்றும் பலவீனத்தில் மனிதர்கள் வேறுபடுகின்றனர்.
இதை நாம் மிகச் சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே ஆற்றல் மிக்க விதத்தில் செயல்பட முடியும். ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்க… நம்முடைய திறமையை வெளிபடுத்தவும், நமது திறமைக்கேற்ற வேலையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் அது உதவும்.
நம்மிடம் உள்ள சிறப்பான திறனை, நாம் தெரிந்து கொள்வது அவசியம். நமக்கென்று ஒரு செயலை செய்யும் ஸ்டைல் இருக்கும். அதை நாம் கண்டறிந்தால் மட்டுமே எந்த வேலையுடனும் நாம் நம்மை பொருத்திக் கொள்ள முடியும்.
நம்முடைய செயல்முறைதான் ஒன்றை எளிதாக்குகிறது… அல்லது கடினமாக்குகிறது. செயல்முறையை பொறுத்தே ஒன்றை முன்கூட்டியோ, அல்லது தாமதமாகவோ செய்ய முடிகிறது.
தொழில் அல்லது வேலையில் பலங்கள் மற்றும் பலவீனங்கள் பற்றிய மதிப்பீடு கண்டிப்பாக உதவும். முதலில் உங்களுடைய மிக பெரிய பலம் எது என்று கண்டுபிடிங்கள். செயலாற்றும் திறமை, உயர் நுணுக்க அறிவு, ஆர்வங்கள் ஆகியவற்றில் உங்களுடைய பலத்தை தெரிந்து கொள்ளுங்கள்.அதேபோல், உங்களுடைய பண்பு நலன்கள், திறன்களை பட்டியலிடுங்கள். படிப்பில், வேலையில், சொந்த வாழ்க்கையில் உங்களுடைய பண்பு நலன்கள் எந்தளவுக்கு உங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கின்றன என்பதை ஆராயுங்கள்.
உங்களுக்கு மிக பெரிய சவாலாக இருக்கும் விஷயம் எது என்பதை அறிந்து, அதை முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள்.
` உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்..’ என்கிறார்கள். முதலில் உங்களை நீங்களே சுய விமர்சனம் செய்யுங்கள்! நீங்கள் கற்பனையாளரா..? அல்லது எதையும் அணுகி ஆராய்பவரா..? அல்லது எந்திரத்தனமானவரா..? என்பதை அறிந்து அதற்கான தொழிலை அல்லது வேலையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
உடல் நன்றாக இல்லாவிட்டால் மனம் பாதிக்கபடும். மனம் சீராக இல்லாவிட்டால் உடல் பாதிக்கபடும். உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தான் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் வேலையை செய்து முடிக்க இயலும். தன்னிடம் உள்ள திறமைகளை, செயல் திறனை முழுமையாக வெளிபடுத்த ஆரோக்கியம் அவசியம்.
ஒரு வேலையை நீங்கள் தள்ளி போடுவது அதன் பின்னர், தொடர்ச்சியாக பல வேலைகளைக் கிடப்பில் போடும்படி செய்து விடும். உங்கள் சுமைதான் மேலும் அதிகரிக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். செயல் தாமதத்தால் விரும்பத்தகாத விளைவுகள், இழப்புகள் உண்டாகும்.
இன்றைக்கே முடிக்கக் கூடிய வேலையை நாளைக்கு என்று தள்ளி போட வேண்டாம். அலுவலகத்தில் மட்டுமல்ல, வீட்டிலும் வேலையைத் தள்ளி போடுகிற பழக்கம் நமக்கு இருக்கிறது. ஐந்து நிமிடம் செய்ய வேண்டிய வேலையை தள்ளி போடுவதால் இறுதியில் அந்த வேலையின் மீது வெறுப்பு ஏற்படும். இதனால் அடுத்தவர்கள் நம்மீது வைத்திருக்கும் அபிப்ராயம் கெட்டுவிடும் சூழல் ஏற்படும்.

Wednesday, 3 August 2016

நட்பு பேணுங்கள்:

`ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ – ஆங்கிலப் பழமொழி.
`அன்பாக இரு`. அனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு. இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். `உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன’ என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும்.
இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே!
“பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்” என்று நபிகள் நாயகம் சொல்கிறார். ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன் இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம்.
`என்னை நேசிப்பவரை நான் நேசிப்பேன், எனக்கு உதவி செய்தவருக்கு நான் உதவி செய்வேன்’ என்பதுவே பலரின் எழுதப்படாத அன்பு இலக்கணம். பழிக்குப் பழி என்பதற்கும், இதற்கும் வித்தியாசமே இல்லை.

“மற்ற எல்லோருமே வெளியே செல்லும்போது உள்ளே வருபவன் தான் உண்மையான நண்பன்” என்று சொல்வார்கள் . ஆமாம், உங்களிடம் எதைஎதையோ எதிர்பார்த்துப் பழகியவர்கள் எல்லாம் உங்களிடம் ஏதுமில்லை என்று அறிந்து விலகிச் செல்லும்போது, உங்களுடன் கரம் கோர்க்க, உங்களின் துயர் போக்க வருபவனே உண்மையான நண்பன் ஆவான். இதைத்தான் “இடுக்கண் களைவதே நட்பு” என்று வள்ளுவர் இலக்கணப்படுத்துகிறார்.
நீங்கள் நட்பு நிறைந்தவரா? என்பதை சோதிக்க உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள்
என்னிடம் எதுவுமே சரியில்லை என்கிறபோதும் அணுகிப் பேசும் நண்பனை பெற்றிருக்கிறேனா?
ஒத்துப்போகாத விஷயங்களின்போது அவனுக்கு தனித்தன்மை இருப்பதை ஆமோதிக்கிறேனா?
வருத்தத்தில் இருக்கும் நண்பனின் சூழலை சமாளிக்க எனக்குத் தெரிந்திருக்கிறதா?
நண்பனின் சில பழக்கங்கள் பிடிக்காதபோது அதைப்பற்றி அவனிடம் வெளிப்படையாக பேசுகிறேனா?
தேவையென்றால் நண்பனிடம் தயக்கமின்றி உதவி கேட்கிறேனா? உதவிக்கு நன்றி கூறுகிறேனா?
நண்பனின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடக்கிறேனா?
நண்பன் ஒரு புதிய நண்பனைச் சந்திக்கும்போது, நம் நட்புக்கு இடையூறு வந்துவிட்டது என்று எண்ணுகிறேனா?
கடைசி இரு கேள்விகளைத் தவிர மற்ற கேள்விகளுக்கு `ஆம்’ என்ற பதில் வராவிட்டால் நீங்கள் உண்மையான நண்பனை அடையவோ, உண்மையான நண்பனாக மாறவோ இன்னும் நிறைய பயணிக்க வேண்டும்.
உங்கள் நட்புறவை பரிசீலிக்க விரும்பினால் உங்கள் வாழ்வின் முக்கியமான 3 உறவுகளை பட்டியலிடுங்கள். அவர்கள் ஏன் உங்களுக்கு முக்கியமானவர்கள்? அவர்களுக்கு அந்த விசேஷ இடத்தைப் பெற்றுத் தந்த குணங்கள் என்ன? அவர்களின் கஷ்டங்களைப் போக்க நான் என்ன செய்ய தயாராக இருக்கிறேன்? என்று பட்டியலிடுங்கள். அவர்களின் சிறப்பு குணங்கள் உங்களுக்கு ஏற்படவும், அதே குணத்துடன் பிறருடன் நேசமாகப் பழகவும் முயற்சி செய்யுங்கள்.
ஒருவரோடு ஒருவருக்கு உள்ள உறவில் மட்டுமே நாம் முழுமையாக நாமாக இருக்கிறோம். நாமிலிருந்து பிரிந்த `நான்’ அழிந்து விடும். அப்படியென்றால் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? முகம் மலர பேசுவதல்ல, அகம் மலர பழகுவதே நட்பு என்கிறார் வள்ளுவர். ஒருவனுக்கு எப்படிப்பட்ட நண்பன் தேவை என்பதை ஆங்கிலக் கவிதை ஒன்று இப்படி வரையறுக்கிறது…
“தன் மனத்தை அப்படியே வெளிப்படுத்த முடிந்தவன்;
எப்போது வாயை மூட வேண்டும் என்று அறிந்தவன்;
அன்புடன் உணவையும், நல்ல நகைச்சுவைகளையும், சூரிய அஸ்தமனத்தையும் பகிர்ந்து கொள்பவன்;
உங்களுடன் பெரியவனாகவோ, சிறியவனாகவோ நடிக்காமல் தோழமையுடன் இருப்பவன்;
நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிப்பவன் எவனோ அப்படிப்பட்ட நண்பனே உங்களுக்குத் தேவை”
நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்!

Tuesday, 2 August 2016

அமைதியான நதியில்…!

மனதை ஒரு நிலைப்படுத்தும் போது கிடைக்கும் வெற்றி, அதை அலைபாய விடும் போது தோல்விக்கு வித்திடுகிறது. மனம் குழப்பத்தில் நிறைந்திருக்கும் போது, சிந்தனைகள் தடம் மாறுகின்றன; இது, ஆசை, பேராசை, பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஏற்பட முக்கிய காரணமாகிறது.
இதிலிருந்து விடுபட, தியானம் செய்வது, முதலிடத்தை பிடிக்கிறது. முறையாக செய்து பார்த்தால், நிச்சயமாக அதன் பலனை அனுபவிக்க முடியும்.
அதிகாலையில், அமைதியான சூழலில், யாரும் தொந்தரவு செய்யாத இடத்தில் கண்களை மூடி, ஏதாவது ஒரு சிந்தனையில், மனதை செலுத்த வேண்டும். இதன் மூலம், உடலும், உள்ளமும் ஆரோக்கியம் பெறும். நாம் எண்ணிக் கொண்டிருக்கும் இலக்கை, சுலபமாக அடைய உதவும்.
தினமும் பயிற்சி செய்ய முடியாதவர்கள், வாரத்தில் ஒருமுறையாவது முயற்சி எடுக்க வேண்டும். வீடு, அலுவலகம், நண்பர்கள், விருந்தினர்கள் மத்தியில் என, எல்லா இடங்களிலும், சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் காணப்படுவீர்கள்.
எந்தப் பெரிய விஷயத்தையும், எளிதாக எடுத்துக் கொள்ளும் இயல்பு வந்து விடும். சக மனிதர்களிடம் அன்பை பரிமாற வைக்கும். இளைஞர்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம், இளமை தான். இந்த வயதிலிருந்தே கடைபிடிக்க ஆரம்பித்தால், முதுமை வந்த பின்பும் கூட, மனம் மற்றும் உடல் சார்ந்த சிக்கலுக்கு இடமிருக்காது.
இன்றைக்கு நகரவே முடியாத அளவுக்கு பணி இருக்கிறது என்று, ஒதுக்க நினைத்தால், நாளடைவில் தள்ளியே போகும் தியானம். குறிப்பிட்ட வேலைகளை, சரியான நேரத்துக்குள், சிறப்பாக நிறைவேற்றுவதற்கு தியானம் முக்கியமான அம்சமாக கருதப்
படுகிறது. எனவே, ஆரோக்கியமாக வாழ்வதற்கு முடிவெடுத்து விட்டால், இன்றே துவங்குங்கள் தியானம்.