Wednesday, 3 August 2016

நட்பு பேணுங்கள்:

`ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ – ஆங்கிலப் பழமொழி.
`அன்பாக இரு`. அனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு. இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். `உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன’ என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும்.
இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே!
“பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்” என்று நபிகள் நாயகம் சொல்கிறார். ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன் இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம்.
`என்னை நேசிப்பவரை நான் நேசிப்பேன், எனக்கு உதவி செய்தவருக்கு நான் உதவி செய்வேன்’ என்பதுவே பலரின் எழுதப்படாத அன்பு இலக்கணம். பழிக்குப் பழி என்பதற்கும், இதற்கும் வித்தியாசமே இல்லை.

“மற்ற எல்லோருமே வெளியே செல்லும்போது உள்ளே வருபவன் தான் உண்மையான நண்பன்” என்று சொல்வார்கள் . ஆமாம், உங்களிடம் எதைஎதையோ எதிர்பார்த்துப் பழகியவர்கள் எல்லாம் உங்களிடம் ஏதுமில்லை என்று அறிந்து விலகிச் செல்லும்போது, உங்களுடன் கரம் கோர்க்க, உங்களின் துயர் போக்க வருபவனே உண்மையான நண்பன் ஆவான். இதைத்தான் “இடுக்கண் களைவதே நட்பு” என்று வள்ளுவர் இலக்கணப்படுத்துகிறார்.
நீங்கள் நட்பு நிறைந்தவரா? என்பதை சோதிக்க உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள்
என்னிடம் எதுவுமே சரியில்லை என்கிறபோதும் அணுகிப் பேசும் நண்பனை பெற்றிருக்கிறேனா?
ஒத்துப்போகாத விஷயங்களின்போது அவனுக்கு தனித்தன்மை இருப்பதை ஆமோதிக்கிறேனா?
வருத்தத்தில் இருக்கும் நண்பனின் சூழலை சமாளிக்க எனக்குத் தெரிந்திருக்கிறதா?
நண்பனின் சில பழக்கங்கள் பிடிக்காதபோது அதைப்பற்றி அவனிடம் வெளிப்படையாக பேசுகிறேனா?
தேவையென்றால் நண்பனிடம் தயக்கமின்றி உதவி கேட்கிறேனா? உதவிக்கு நன்றி கூறுகிறேனா?
நண்பனின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடக்கிறேனா?
நண்பன் ஒரு புதிய நண்பனைச் சந்திக்கும்போது, நம் நட்புக்கு இடையூறு வந்துவிட்டது என்று எண்ணுகிறேனா?
கடைசி இரு கேள்விகளைத் தவிர மற்ற கேள்விகளுக்கு `ஆம்’ என்ற பதில் வராவிட்டால் நீங்கள் உண்மையான நண்பனை அடையவோ, உண்மையான நண்பனாக மாறவோ இன்னும் நிறைய பயணிக்க வேண்டும்.
உங்கள் நட்புறவை பரிசீலிக்க விரும்பினால் உங்கள் வாழ்வின் முக்கியமான 3 உறவுகளை பட்டியலிடுங்கள். அவர்கள் ஏன் உங்களுக்கு முக்கியமானவர்கள்? அவர்களுக்கு அந்த விசேஷ இடத்தைப் பெற்றுத் தந்த குணங்கள் என்ன? அவர்களின் கஷ்டங்களைப் போக்க நான் என்ன செய்ய தயாராக இருக்கிறேன்? என்று பட்டியலிடுங்கள். அவர்களின் சிறப்பு குணங்கள் உங்களுக்கு ஏற்படவும், அதே குணத்துடன் பிறருடன் நேசமாகப் பழகவும் முயற்சி செய்யுங்கள்.
ஒருவரோடு ஒருவருக்கு உள்ள உறவில் மட்டுமே நாம் முழுமையாக நாமாக இருக்கிறோம். நாமிலிருந்து பிரிந்த `நான்’ அழிந்து விடும். அப்படியென்றால் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? முகம் மலர பேசுவதல்ல, அகம் மலர பழகுவதே நட்பு என்கிறார் வள்ளுவர். ஒருவனுக்கு எப்படிப்பட்ட நண்பன் தேவை என்பதை ஆங்கிலக் கவிதை ஒன்று இப்படி வரையறுக்கிறது…
“தன் மனத்தை அப்படியே வெளிப்படுத்த முடிந்தவன்;
எப்போது வாயை மூட வேண்டும் என்று அறிந்தவன்;
அன்புடன் உணவையும், நல்ல நகைச்சுவைகளையும், சூரிய அஸ்தமனத்தையும் பகிர்ந்து கொள்பவன்;
உங்களுடன் பெரியவனாகவோ, சிறியவனாகவோ நடிக்காமல் தோழமையுடன் இருப்பவன்;
நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிப்பவன் எவனோ அப்படிப்பட்ட நண்பனே உங்களுக்குத் தேவை”
நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்!

Tuesday, 2 August 2016

அமைதியான நதியில்…!

மனதை ஒரு நிலைப்படுத்தும் போது கிடைக்கும் வெற்றி, அதை அலைபாய விடும் போது தோல்விக்கு வித்திடுகிறது. மனம் குழப்பத்தில் நிறைந்திருக்கும் போது, சிந்தனைகள் தடம் மாறுகின்றன; இது, ஆசை, பேராசை, பொறாமை, தாழ்வு மனப்பான்மை ஏற்பட முக்கிய காரணமாகிறது.
இதிலிருந்து விடுபட, தியானம் செய்வது, முதலிடத்தை பிடிக்கிறது. முறையாக செய்து பார்த்தால், நிச்சயமாக அதன் பலனை அனுபவிக்க முடியும்.
அதிகாலையில், அமைதியான சூழலில், யாரும் தொந்தரவு செய்யாத இடத்தில் கண்களை மூடி, ஏதாவது ஒரு சிந்தனையில், மனதை செலுத்த வேண்டும். இதன் மூலம், உடலும், உள்ளமும் ஆரோக்கியம் பெறும். நாம் எண்ணிக் கொண்டிருக்கும் இலக்கை, சுலபமாக அடைய உதவும்.
தினமும் பயிற்சி செய்ய முடியாதவர்கள், வாரத்தில் ஒருமுறையாவது முயற்சி எடுக்க வேண்டும். வீடு, அலுவலகம், நண்பர்கள், விருந்தினர்கள் மத்தியில் என, எல்லா இடங்களிலும், சுறுசுறுப்பாகவும், இளமையாகவும் காணப்படுவீர்கள்.
எந்தப் பெரிய விஷயத்தையும், எளிதாக எடுத்துக் கொள்ளும் இயல்பு வந்து விடும். சக மனிதர்களிடம் அன்பை பரிமாற வைக்கும். இளைஞர்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம், இளமை தான். இந்த வயதிலிருந்தே கடைபிடிக்க ஆரம்பித்தால், முதுமை வந்த பின்பும் கூட, மனம் மற்றும் உடல் சார்ந்த சிக்கலுக்கு இடமிருக்காது.
இன்றைக்கு நகரவே முடியாத அளவுக்கு பணி இருக்கிறது என்று, ஒதுக்க நினைத்தால், நாளடைவில் தள்ளியே போகும் தியானம். குறிப்பிட்ட வேலைகளை, சரியான நேரத்துக்குள், சிறப்பாக நிறைவேற்றுவதற்கு தியானம் முக்கியமான அம்சமாக கருதப்
படுகிறது. எனவே, ஆரோக்கியமாக வாழ்வதற்கு முடிவெடுத்து விட்டால், இன்றே துவங்குங்கள் தியானம்.

பிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்!

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அது ஒப்ப நில்!
இந்த குறளுக்கு நமக்கு கண்டிப்பாய் விளக்கம் தெரிந்திருக்கும். நமக்கு துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சியே, அந்த துன்பத்தை தூர காணாமல் போக்கிவிடும். அந்த துன்பத்திற்கு நிகர், அந்த நேர மகிழ்ச்சி தான்.
சமீபத்தில் ஒரு வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இதற்கான ஒரு புது விளக்கம், நாம் ஒத்துக் கொள்கிற மாதிரி, வேறு விதமாக கூறப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றால், – துன்பம் வரும்போது நகர்ந்து விடுங்கள் என அர்த்தம்.
அதற்காக, ‘துன்பத்தை பார்த்து பயந்து ஓடி விடுங்கள்’ என்று நேர் அர்த்தம் கொள்ளக் கூடாது; அந்த துன்ப மனநிலையிலிருந்து நகர்ந்து, தள்ளி நின்று, அந்த பிரச்னையை – துன்பத்தை கவனியுங்கள்; தீர்வு கிடைக்கும் என்பதாக விளக்கம் கூறினர்.
இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை,
ஒத்துக் கொள்ளக் கூடியதா என்று சில திருக்குறள் ஆர்வலர்களிடம் கேட்டேன்.’இதுவரை திருக்குறளுக்கு என்று திருவள்ளுவரால் இயற்றப்பட்ட பொழிப்புரை ஒன்று தனியாக கிடையாது. படித்தவர்கள் அவரவர் வசதிக்கேற்ப, புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப இயற்றிய பொழிப்புரை தான் வழக்கத்தில் இருந்து வருகிறது. அதனால், இதையும் ஒரு விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்; தவறொன்றுமில்லை’ எனக் கூறினர்.
‘நகுக’ என்றால் என்ன?
யோசித்து பார்த்தால், இந்த, ‘நகுக’ என்பதற்கு இப்படி நகர்ந்து போவது என்றே வைத்துக் கொண்டால் கூட நன்றாகத் தான் இருக்கும் என்றே தோணுகிறது. நீங்கள் மிகவும் துன்பத்தில் இருக்கும் போது, ‘அய்யய்யோ… நான் படும் துன்பத்தை சுற்றியே என் சிந்தனை சுழல்கிறதே…’ என்று வெறுப்படைந்து விடாமல், ‘இல்லை! நான் மகிழ்ச்சியோடு தான் இருக்கிறேன்’ என்று நேர்மறையாக சிந்திக்கும் சித்தாந்தத்தின் படி, மாற்றுச் சிந்தனையைத் திணிக்க நீங்கள் முயற்சி செய்தால், மனதுக்குள் ஒரு போராட்டம் தான் உருவாகும்.
அதற்கு பதிலாக உங்களின் சிந்தனையை நீங்களே சற்றுத் தள்ளி நின்று, கவனிக்க ஆரம்பியுங்கள்.
துன்பமான சிந்தனையோ, மகிழ்ச்சியான சிந்தனையோ, சபலமான சிந்தனையோ…
அதை நீங்களே விலகி நின்று பார்க்கும்போது,
உங்களுக்குள்ளே, ‘புரிந்து கொள்ளல்’ நடக்கும்.இதுபோன்ற மனநிலை வந்து விட்டால் துன்பம், மகிழ்ச்சி இந்த இரண்டுமே ஒன்று தான்! மகிழ்ச்சி
எப்படி ஓர் அனுபவமோ, அதே போல் துயரமும் ஓர் அனுபவமே! ஆனால் மனதில் அமைதியும், தெளிவும் இல்லாத மனிதர்களுக்கு, மகிழ்ச்சி கூட சோகமானதாய் போய்விடும். ஆனால் மனதுக்குப் பிடித்து விட்டால், இனிப்பு என்பது எப்படி ஒரு சுவையோ, அதேபோல், கசப்பும் ரசிக்கக் கூடிய ஒரு சுவைதான் என்பதை உணர்ந்து கொண்டால், ‘பிரச்னையா… அய்யோ, இதென்ன எனக்கு மட்டும் இப்படி கசக்கிறதே!’ என்ற
புலம்பலோ இருக்காது!: சிறுபிள்ளையாக இருக்கும்போது, இனிப்பு ஒன்று தான் சுவை. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு எல்லாம் சுவை இல்லை என்று, நமக்கு நாமே முடிவெடுத்து, மற்ற சுவைகளுக்கு இடம் தராமல் மூடி விடுகிறோம்.
அது போல, மகிழ்ச்சி மட்டும் தான் நல்ல உணர்ச்சி; மற்றது எல்லாம் வெறுக்கத்தக்க உணர்ச்சிகள் என்று எண்ணி நாம், அனேக உணர்ச்சிகளுக்கு கதவை திறப்பது இல்லை; பயத்துடனேயே அதை எதிர்நோக்காமல் விட்டு விடுகிறோம்.
பிரச்னைகளை விட்டு ஓடவோ, விலகி ஒதுங்கவோ கூடாது. அப்படியே துன்பம் ஏற்பட்டுவிட்டால், கத்தி கூப்பாடு போட்டு அதகளம் பண்ணுவதில் அர்த்தம் இல்லை. ‘இது எனக்கான துன்பம் இல்லை… யாருக்கோ உள்ளது. அவர்களுக்கு வெளியில் ஒரு மூன்றாவது மனிதராய் நான் என்ன தீர்வு சொல்ல இயலும், முடியும்’ என்கிற மாதிரி தள்ளி நின்று யோசித்தாலே அந்த துன்பத்தின் வீரியம் குறைந்து, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும்.
ஒவ்வொரு நொடியும் நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான விளைவு தான், நாம் வாழ்க்கையில் சந்திக்கும் இன்பங்களும், துன்பங்களும். வேதனையான சூழ்நிலையில் எதிர்பாராத பாதிப்புகள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகின்றன. ஆனால், எந்த சூழ்நிலையிலும், வாழ்க்கையில் ஓர் அர்த்தம் உள்ளது என்பதை, நாம் கண்டுகொள்ள வேண்டும்.
இருண்ட பக்கங்கள்?
துன்பம் நம்மை சூழ்ந்துக் கொள்ளும் போது : வாழ்க்கையின் இருண்ட பக்கங்கள் முழுமையாக ஆட்கொண்டது போல தோன்றுகிறது.
துன்பத்தை ஒரு எல்லையில் வைத்து பார்ப்பது கடினம் தான். பழகினால், பழக்கிக் கொண்டால், இதெல்லாம் நமக்கு ஒரு விஷயமா என்று நீங்கள் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். இப்படி எந்தச் சிறையிலும் அடைபடாமல், தள்ளி நின்று சிந்தனையைக் கவனிக்கும் போது மனம் தானாகவே அமைதி அடையும். திரைகள் விலகும்; உண்மைகள் புரியும். வாழ்க்கை அழகாக,
அற்புதமானதாக, ஒரு மலரைப் போல மவுனமாக மென்மையாக விரியும். முயற்சித்து தான் பார்ப்போமே, கொஞ்சம்
நகர்ந்து நின்று!

முன்னேறத் தூண்டும் `சுய கவுரவம்’


வ்வொரு மனிதனுக்கும் சுயகவுரவம் உண்டு. அது தான் அவனை தன்னம்பிக்கையோடு வழிநடத்திச் செல்ல உதவுகிறது.
ஒரு பழைய கதை உண்டு. அதாவது, ஒரு விளக்கில் அடைபட்டுக் கிடந்த பூதமானது, அந்த விளக்கை துடைத்து. தன்னை விடுதலை செய்பவனின் விருப்பங்களை நிறைவேற்றித் தருவதாக கூறியது. இந்தச்சூழ்நிலை உனக்கு ஏற்பட்டால். நீ என்ன கேட்பாய்?
ஒரு கார் வேண்டும் என்று கேட்பாயா? அல்லது ஏராளமான செல்வம் வேண்டும் என்று கேட்பாயா? அல்லது தனக்கு கவலையே இல்லாத ஒரு வாழ்க்கை வேண்டும் என்று கேட்பாயா?
அல்லது நீ உன்னைப் பற்றியே சுயமாகச் சிந்திக்காமல் இருந்தால் வேறு என்ன கேட்பாய்?
உனது நண்பர்களுக்காகவும், நீ விரும்புகிறவர்களுக்காவும், நீ உன்னைச் சார்ந்திருப்பவர்களுக்காகவும், நீ என்ன வரம் கேட்பாய்?
உனது சுய கவுரவத்தை பாதிக்காத வகையில், மிகவும் திருப்தி அளிக்கக்கூடிய சந்தோஷத்தையும், தன்னம்பிக்கையையும் கேட்டால், அது எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்.
மற்றவர்கள் உன்னைப்பற்றி உயர்வாகச் சொல்லுவது சுய கவுரவம் ஆகாது. நீ விலை மதிப்பற்றவன் என்பதை நீயே உணர்ந்து கொள்ளுவது தான் சுயகவுரவம்.
நீ முழுமையாக குற்றமற்றவன் என்று நினைத்தால் மட்டும் போதாது. நீ குற்றமற்றவன் என்பதை, உன்னை நேசிக்கிற மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சுயகவுரவம் என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், அது அவன் முன்னேற தூண்டுகோலாக இருக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
நமது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியவைகள் ஏராளமாக இருக்கின்றன. அதில் ஒன்றுதான் சுய கவுரவம் 
சுய கவுரவத்தை இரண்டு வகையாகச் சொல்வது உண்டு. ஒன்று நம்மை நாமே மதிப்பது. இன்னொன்று, மற்றவர்கள் நம்மை மதிக்கும்படி நடந்து கொள்வது.
நமது உள்மனதின் மதிப்பீடு தான் சுயகவுரவம். இது தான் நிரந்தரமானது. மற்றவர்கள் நம்மை அங்கீகரிப்பது, நமது தகுதியை ஏற்றுக்கொண்டு பாராட்டுவது என்பது நிரந்தரமானது அல்ல.
சுயகவுரவத்தை வளர்ப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன.
நம்மை நோக்கி வரக்சுடிய துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், அதை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வது தான் உனது சிந்தனையாக இருக்க வேண்டும்.
உனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய 3 விஷயங்களை மனதில் நிறுத்திக் கொள்.
நம்மால் முடியும் என்று நீயே உன்னை பாராட்டிக் கொள்.
தவறு செய்யும்போது தான், நீ மேலும் உறுதியாக வளர அதிக அளவில் வாய்ப்பு ஏற்படும்.
குற்றங்களை ஒத்துக் கொள். காரணம், குற்றம் செய்யாதவர்களே இல்லை. தவறு தான் நமது வாழ்க்கையின் படிப்பினை ஆக அமைகிறது.
உன்னுடைய திறமைகளை எல்லாம் நீ பரிசோதித்துப் பார். அப்போது தான் உனக்குள் இருக்கும் புதிய திறமைகள் வெளிப்படும்.
உன்னால் முடியாத இலக்கை நிர்ணயிக்காதே. ஆனால் பெரிய இலக்குகளை, சிறிது சிறிதாக நிறைவேற்ற வேண்டும். அப்போது உனக்கு புத்துணர்ச்சி ஏற்படும்.
நடந்த நல்லவற்றையே நினைவில் வைத்துக் கொள். வாழ்க்கையில் உன்னை விட உயர்ந்தவர்களோடு உன்னை ஒப்பிட்டுப் பார்க்காதே.
உனக்குச் சமமாக இருப்பவர்களை கவனி. பலரது வாழ்க்கையில் குறைபாடுகளும், பிரச்சினைகளும் இருப்பதை நீ புரிந்து கொள்வாய்.
அப்போது உன் மனதில் ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மை, உன்னை விட்டு, காலைப்பனி போல மறைந்து விடும்.
உனக்கு ஏற்றத் தாழ்வுகள் வரும்போது கூட, உன்னைப் பாராட்டுபவர்களும், உனக்கு தன்னம்பிக்கை கொடுக்கக்கூடியவர்களும் உன்னைச் சுற்றி இருக்குமாறு வைத்துக் கொள்.
சுய கவுரவம் உள்ளவர்களே வெற்றி பெறுபவர்களாக திகழ்கிறார்கள். எனவே சுய கவுரவத்தையே உனது குறிக்கோளாக வைத்துக் கொள்.உன்னைப்பற்றி நீ நல்ல விதமாக உணர்ந்தால், வெற்றி உன்னைத் தானாகத்தேடி வரும்.

Wednesday, 27 July 2016

பேசுவதால் பயனேதும் இல்லை


வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்காக பயிர்களை திருப்பித்தரும். அதைப்போலவே ஒருவர் செய்யும் நன்மையும், தீமையும் பல மடங்காக பெருகி அவரிடமே வந்து சேரும். ஆகவே, எப்போதும் நன்மை செய்பவர்களாகவே இருங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்கூட, நன்மை செய்வதிலிருந்து தவறாதீர்கள். இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.
* சிலர் தேவையே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். எதற்காக பேசுகிறோம், எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ, பேச்சை கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே, அமைதியாகவே இருங்கள்.
* நெருப்பு எரியும் இடத்தில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருக்கும். நெருப்பினால் நமக்கு தேவையானவற்றை சூடுபடுத்திக் கொள்ளாலாம் அல்லது பிற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், புகையால் பயன் ஏதும் இல்லை. புகையை நிறுத்த வேண்டுமானால் நெருப்பை அணைக்க வேண்டும். நெருப்பு என்ற பற்றினை அணைத்து விட்டால், புகை என்ற காரியமானது தாமாகவே அழிந்து விடுகிறது.
* ஆசை அழிக்கும் குணமுடையது. அன்பு வளர்க்கும் குணத்தை உடையது. நீங்கள் வளர்க்கும் குணமுடையவர்களாக இருங்கள். வீணான ஆசைகளால் துன்பம் நேருமே தவிர நன்மை எதுவும் உண்டாகிவிடாது என்பதால் ஆசையை அழித்து விடுங்கள்.

மனமே… ரிலாக்ஸ்!

வேலை, வேலை, வேலை என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்காமல், இடையிடையே மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வது நல்லது.
யாரிடம் பேசினால், உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள், உங்கள் மனதுக்கு தெளிவைத் தரும்.
ஏற்றுக் கொள்ளுங்கள்: இந்த உலகத்தில், ஒருவரே எல்லாவற்றையும், தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட; மலையைத் தலையால் முட்டி உடைக்க முடியாது. ஆனால், சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில், உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.
தெளிவாகச் செய்யுங்கள்: எந்த செயல் செய்தாலும், முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக, ஒரு வேலையைச் செய்வதை விட, அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், செய்யும் வேலையை காதலியுங்கள். ஈடுபாட்டுடன் காட்டிய வேலை, திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.
விளையாடுங்கள்: உங்கள் நேர நிர்வாக அட்டவணையில், விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோவிலுக்குச் செல்வதை விட, கால்பந்து விளையாடுவது மேலானது என, விவேகானந்தர் கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் உற்சாகம் தரும்.
பிறரையும் கவனிங்க: உங்கள் விருப்பங்களையும், தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது, மன உளைச்சலில் கொண்டு போய்விடும். நமது விருப்பு, வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், பிரதிபலன் எதிர்பாராமல், தயங்காமல் செய்யுங்கள். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பி வரும்!

Monday, 25 July 2016

உறவுகளை சார்ந்திருங்கள்

உயிர் உள்ளது, உயிர் அற்றது என்று, உலகில் உள்ளவற்றை பிரிக்கலாம். உயிர் உள்ள அனைத்தும், உணர்வை வெளிப்படுத்துகின்றன. உணர்வுகளை வெளிப்படுத்துவதால் உறவுகள் ஏற்படுகின்றன. அடுத்த கட்டமாக, உணர்வுகளை பகிர்ந்து கொள்வதும் அவசியமாகிறது. இப்படித் தான், அறிவு மற்றும் எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன.
தனி மரம் தோப்பாகாது; தனி மனிதன் சமூகமாக மாட்டான். உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவற்றை பரிமாறிக் கொள்வதால் பயன் கிடைக்கிறது. நல்லது – கெட்டது, சுகம் – துக்கம், அறிவு – அறியாமை, தெளிவு – குழப்பம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் போதுதான், அவை அர்த்தம் பெறுகின்றன. தோன்றியதை சொல்ல சக மனிதன் தேவைப்படுகிறான். இப்படி பரிமாறிக் கொள்வதால், ஆதாயம் மற்றும் இழப்பு ஆகியவை இரு சாராருக்கும் கிடைக்கிறது. பலனை பொறுத்து, உறவு நிற்கும் அல்லது நீர்த்துப் போகும்.
மனிதன், தனக்காக வாழலாம்; ஆனால், தானாக வாழ முடியாது. இது, உலக நியதி. அதனால்தான், ‘யாருக்காக வாழ்கிறோம்’ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதைப் பொறுத்து தான், வாழ்க்கையில் ஈடுபாடு ஏற்படுகிறது.
சங்கடப்படும் போதுதான் ஆதரவும், துணையும் அதிகமாக தேவைப்படும். அதுபோல் சந்தோஷமாக இருக்கும்போது, அதை பகிர்ந்து கொள்ளவும், நமக்கு உறவுகள் தேவைப்படுகின்றன. எனவே உறவை சார்ந்திருங்கள்.