Sunday, 24 July 2016

சாதிக்க விருப்பமா.. அவமானப்படுங்கள்

என்னை நானே யாரென்று
புரிய எனக்கு தேவைப்படும்
ஓர் ஆயுதம் தான் அவமானம்!
இது உண்மை என்பது போல்,
அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.  அவமானங்கள் தான், நம்மை திசைமாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்தஅவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்ப கட்ட அடிதளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கான படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும்.
நம்மை அவமானப் படுத்து வோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அவமானங்களுக்காக குமைந்து கொண்டிருக்காதீர்கள். நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும்போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும்.
நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்து தான் ஆகவேண்டும்.
நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. அந்த குப்பையை தனக்கான உயிர்ச்சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளை தருவதில்லையா! நாம் அந்த செடியை போல இருக்க வேண்டாமா? மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கி செல்ல வேண்டாமா?
உங்களுடைய குறைகளை சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியை பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்! ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்… ‘நம்மை இவ்வளவு அவமானப்
படுத்துகின்றனரே…’ என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்.
சோர்ந்து போகாதீர்
அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றி
யாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள்.
எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தை கண்டு சோர்ந்து போய், அந்த காரியத்திலிருந்து விலகிவிடுவது.
மனித இனத்தை தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான்.
ஆகவே, அவமானப்படுவது ஒன்றும் பெரிய தப்பில்லை. இப்போது சொன்ன விஷயங்கள் அனைத்துமே, நல்ல விஷயங்களுக்கு மட்டுமே… 

ஞானம் பெற வேண்டுமா?

உலக விவகாரங்களில் அகப்பட்டு தவிக்கிறான் மனிதன். அதுவா, இதுவா? இதை செய்யலாமா, கூடாதா? செய்தால் என்ன? ஆதாயம் கிடைக்குமானால் அதை செய்யலாமே என்ற எண்ணம் தோன்றுகிறது. அதே சமயம், சே… இப்படி செய்வது தர்மமல்ல… மகா பாவமும் கூட! இதை செய்து, ஏன் பாவத்தை கட்டிக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது. அப்போது தான் அதுவா, இதுவா என்று யோசித்து திண்டாடுகிறான் மனிதன். இதற்கு காரணம், மனம் தான்.
மனம் ஒரு குரங்கு. அது சும்மா இராது; இங்குமங்கும் ஓடிக் கொண்டே இருக்கும். அது போல மனம் எதையெல்லாமோ யோசிக்கும்; ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கும். அப்போது, இவனுக்கு சரியான வழி காட்டுவது எது?
ஞானம், அஞ்ஞானம் என்று இரண்டு உள்ளது. பொதுவாக எல்லாரிடமும் அஞ்ஞானம் என்பது நிறைந்துள்ளது. இது, பிறவியோடு சேர்ந்து வருவது; ஞானம் என்பது பிறகு சம்பாதித்து கொள்வது. இந்த ஞானம் ஏற்படும் போது, அஞ்ஞானம் தானாகவே வெளியேறி விடுகிறது. ஞானம் ஏற்பட வேண்டுமானால், அதற்கு ஒரு குருவை தேடி அலைந்து, அவருக்கு மனம் கோணாமல் பணிவிடை செய்து, பிறகு அவரிடமிருந்து ஞானம் பெற வேண்டும்.
மனதில் தெளிவும், வைராக்கியமும் ஏற்பட்டு விட்டால் ஞானம் வரும். மனிதனுக்கு மனம், மனசாட்சி என்று இரண்டு உள்ளது. இதில், மனம் என்பது ஏதோ ஒன்றை விரும்புகிறது. இதில் நியாய, அநியாயம் கிடையாது. மனம் ஒன்றை விரும்பினால், அதை அடைய ஆசைப்படுகிறது. ஆனால், மனசாட்சி அப்படியல்ல! இது, நமக்கு கிடைக்க வேண்டியது தானா, அதை அடைவது நியாயமா என்றெல்லாம் கேள்விகள் கேட்கும்.
மனதுக்கும், மனசாட்சிக்கும் இடையே போராட்டம் நடக்கும். இதில், எது வலுவாக உள் ளதோ, அது வெற்றி பெறும். ஒருவன், ஒரு காரியத்தை செய்து விட்டு, “என்ன சார் பண்றது? மனசாட்சிக்கு விரோதமாத் தான் அதை செய்ய வேண்டியிருந்தது…’ என்கிறான்.
அதாவது, மனம் போனபடி தான் அதை செய்திருக்கிறான். இங்கே மனம் வெற்றி பெற்றுள் ளது. “நானும் செய்யலாமா என்று யோசித்தேன். ஆனால், என் மனசாட்சி அப்படிச் செய்ய இடம் தரவில்லை; அதனால், அதை செய்யவில்லை…’ என்கிறான். இங்கே மனம் செய்யச் சொன்னதை, மனசாட்சி தடுத்து விட்டது. மனசாட்சிக்கு வெற்றி. மனதை விட, மனசாட்சி சொல்வதே மேலானது. இதை, சரியான முறையில் தீர்மானம் செய்வதற்கு தான் ஞானம் தேவைப்படுகிறது.
எத்தனையோ இன்ப, துன்பங்களில் அகப்பட்டு உழலும் மனிதனுக்கு நற்கதி கிடைக்க வேண்டுமானால், ஞானம் ஏற்பட வேண்டும். சத்தியம், அன்பு, அகிம்சை போன்றவைகள் நல்ல குணங்கள்.
இவை இருந்தால், தவறான வழியில் செல்லாமல், நேர் வழியில் செல்ல முடியும். இதற்கான தகுந்த முடிவெடுப்பது தான் ஞானம்; தவறான முடிவெடுப்பது அஞ்ஞானம். ஞானம் பெற்று, ஞானியாக வாழ்ந்து, பகவானை அடைவது நல்லதா… அஞ்ஞானியாக இறப்பது நல்லதா? இதை யோசித்து, நல்ல முடிவு செய்வது தான் ஞானம்!

Friday, 22 July 2016

இதுதான் ரகசியம்

இன்று நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்கள், நாம் எதிர்பார்த்தபடி இல்லை. நம்மை சுற்றியிருக்கும் நட்பு, உறவு, சூழ்நிலை, சமுதாயம் போன்ற அனைத்துமே சரியில்லை என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக நாம் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடாது என்று நமக்கு நாமே தண்டனை கொடுத்துக்கொண்டு கவலையுடனும், பயத்துடனும், வேதனையுடனும் அமைதியற்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பது சரியா?
இதே மனிதர்களுடன், இந்த சூழ்நிலையில், இதே சமுதாயத்தில்தான் நாம் வாழ்ந்தாகவேண்டும். இந்த வாழ்க்கையை வேதனையுடன் கழிப்பவர்கள் அதற்கு விதி என்று பெயரிட்டிருக்கிறார்கள். சிலரோ, `மதியால் விதியை வெல்லலாம்’ என்றும் கூறுகிறார்கள். விதியை மதியால் வெல்வதற்கான சரியான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
நம் எண்ணங்கள் மூலம், நம் உணர்வுகளை மாற்றலாம். எண்ணங்களை செம்மையாக்கி, உணர்வுகளை மேம்படுத்தி நாம் செய்யும் செயல்கள் அறிவார்ந்தவையாக இருக்கும். அதைத்தான் மதி என்று கூறுகிறோம். அந்த மதி மூலம், விதி என்ற வேதனையை, துயரத்தை நம்மால் போக்க முடியும்.
சமுதாயம், சூழ்நிலை, மனிதர்கள் எல்லாம் மாறினால் நான் நிம்மதியாக இருப்பேன் என்ற எண்ணம் நமக்கு இருப்பது சரியல்ல. நம்மால் நம்மைத்தான் மாற்ற முடியும். மற்றவர்களை மாற்ற முடியாது. அதனால் மற்றவர்கள் மாறினால் நான் நிம்மதியாக இருப்பேன் என்று கூறக்கூடாது. நாம்தான் நம் எண்ணங்களை மாற்றி நம்மை நிம்மதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு எதிரான கருத்தை ஒருவர், சூடாக சொல்லியிருக்கலாம். `அது அவரது கருத்து. அவர் புரியாமல் பேசி இருப்பார். ஏதேச்சையாக அப்படி கூறியிருப்பார். என்னை நோகடிப்பது அவர் நோக்கம் அல்ல..` என்பது போன்ற எண்ணங்களை நீங்களே உருவாக்கி, உங்கள் மனதை நீங்களே ஆறுதல்படுத்திக்கொள்ளவேண்டும்.
சிந்தித்துப்பாருங்கள். ஒருவர் உங்களைப் பற்றி ஒரே ஒரு முறை, உங்களுக்கு பிடிக்காத ஒரு வார்த்தையை பிரயோகித்திருக்கிறார். அதை அதோடு விடாமல் நீங்கள் எத்தனை முறை உங்கள் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அவர் ஒருமுறையோடு விட்டுவிட, நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப அதை நினைத்து உங்கள் மனதை புண்படுத்தவேண்டும். அவர் அப்படி பேசிவிட்டார் என்று பலரிடம்கூறி, உங்களுக்கு ஏற்பட்ட காயத்தை நீங்களே ஏன் ஆறவிடாமல் செய்யவேண்டும்.
உங்கள் மனதின் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் மகிழ்ச்சி மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் அன்றே, அப்போதே அந்த வார்த்தையை மறந்துவிடுவதுதானே நல்லது.
ஒருவரை நீங்கள் சரியில்லாதவர் என்று கூறிக்கொண்டிருக்கும்போது, சிலர் அவரை சிறந்தவர் என்று கொண்டாடிக்கொண்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அதை வைத்து பார்க்கும்போது எந்த மனிதரும் கெட்டவரில்லை என்பது உங்களுக்கு தெரியவரும். எல்லா மனிதர்களிடமும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. அதனால் ஒரு மனிதரின் குறைகளை மட்டும் கண்டுபிடித்து, நம் மனதை குறைபடுத்தி, நம் நிம்மதியை கெடுத்துக்கொண்டிருப்பதைவிட, அவரிடம் இருக்கும் நிறையை பெரிதாக்கி, நமக்குள் நிம்மதியை உருவாக்கிக்கொள்வதுதான் நல்லது. கனி இருக்க நாம் ஏன் காயை கவர்ந்திழுக்க வேண்டும்!

நாணயத்தின்’ விலை?


நான் மிகவும் நேர்மையாகவும், நாணயமாகவும் வேலை செய்வேன். அதுதான் எனக்கு பிடிக்கும். அது தான் என் கொள்கை’ என்று சிலர் சொல்வார்கள்.
அவர்களே சில நாட்களில், `நான் அப்படி எல்லாம் நீதி, நியாயம் மாறாமல் வேலை பார்த்து என்ன லாபம்? மற்றவர்கள் எல்லாம் எப்படி எப்படியோ இருக்கிறார்கள். பொய் சொல்கி றார்கள்… ஏமாற்றுகிறார்கள்.. அரைகுறையாகத்தான் வேலைபார்க்கிறார்கள். உண்மையாக உழைத்து என்ன கிடைக்கப் போகிறது. அதை யாரேனும் பாராட்டவா போகிறார்கள்? நாண யத்திற்கும், நேர்மைக்கும் இந்த காலத்தில் மதிப்போ, மரியாதையோ இல்லவேஇல்லை. நான் மட்டும் யோக்கியமாக இருந்து பலனில்லை. ஊர் எப்படி போகிறதோ அப்படியே நானும் போய்விடலாம் என்று நினைக்கிறேன்’ என்று நீண்ட விளக்கம் கொடுப்பார்கள்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள். நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள். நாணயமாக இருக்கிறீர்கள். உண்மையாக இருக்கிறீர்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
நேர்மை, நாணயம், உண்மையின் மதிப்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். அதனால் அப்படி வாழ்கிறீர்கள். விலை மதிப்பற்ற அந்த நற்குணங்கள் உங்களுக்கு சுயமரியாதையையும், சுய கவுரவத்தையும் கொடுக்கும். மிகச் சிறந்த ஆத்ம திருப்தியையும் அது தரும்.
உங்களுக்கு இத்தனையும் கிடைக்கும்போது மற்றவர்கள் பாராட்டினால் என்ன.. தூற்றி னால் என்ன! அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்.
“நற்பண்புகள் என் வாழ்க்கையின் அஸ்திவாரம். அதை நான் எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டேன். அதன் மூலம் என் மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. அந்த நற்குணங்கள் இன்னமும் இந்த உலகத்தில் மறைந்துவிடாமல் என்னால் காப்பாற்ற முடிகிறது என்ற திருப்தியும் ஏற்படுகிறது.
ஒரு சிலர் 500, 1,000 ரூபாய் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாணயமாகவும், நேர்மை யாகவும் இருப்பார்கள். அதுவே ஒரு சில லட்சங்கள் என்றாகும்போது அந்த நாணயத்தை யும், நேர்மையையும் விட்டு கொடுத்து விடுவார்கள். “நேர்மைக்கும், நாணயத்திற்கும் என்னால் விலை நிர்ணயிக்க முடியாது. நான் நானாக வாழ விரும்புகிறேன்” என்று உங்களுக்குள்ளே தினமும் கூறிக்கொள்ளுங்கள். அதன்படி வாழ்ந்து பாருங்கள். எல்லை யற்ற இன்பத்தோடு உங்களால் வாழ முடியும். அதற்குரிய பலனும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

மறப்போம் மன்னிப்போம்

‘மறந்து விட்டேன், மறந்து போனது, அச்சச்சோ! இப்படி மறந்து போகிறேனே’ என்று அங்கலாய்க்கிறோம். ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்தத்தான் முயல்கிறோம், முயல வேண்டும் என்றும் சொல்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு விஷயத்தை மறப்பதற்கு தான் உண்மையில் முயல வேண்டி இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை மறக்க முடியாமல் தான் துன்பப்படுகிறோம்; துன்பப்படுத்துகிறோம்.
ஒரு நிகழ்வை சந்திக்கிறோம். அந்நிகழ்விற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பொறுத்து தான் அதை சந்திக்கிறோமா, எதிர் கொள்கிறோமா என்பது முடிவாகிறது. அதை பொறுத்து, நமக்குள் ஏற்படும் அனுபவங்களுக்கு ஏற்ப, உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. அதை பொறுத்து இன்பம், துன்பம் தீர்மானிக்கப்படுகிறது.
உணர்வின் வெளிப்பாட்டிற்கு ஏற்ப அந்த சம்பவம் முக்கியத்துவத்தை பெறுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு உணர்ச்சி கொந்தளிப்பிற்கு காரணமாகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அது தீவிரமாக, நினைவில் நீங்காமல் நிற்கிறது. ஒன்றை மறக்க வேண்டுமானால், அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நிறுத்த தெரிய வேண்டும்.
முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க முயற்ச்சி, பயிற்சி மற்றும் அனுபவம் தேவை.
எனவே, ஒன்றை மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் அடிப்படை, சம்பவத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருக்க தெரிய வேண்டும். எனவே, முயற்சி செய்து மன்னித்து மறப்போமாக!

தோல்வியை கொண்டாடுங்கள்

தோல்வி என்றால் என்ன; போட்டியில் தோற்பது தான்
தோல்வி என, நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல.
ஏதாவது ஒரு காரியத்தை எடுத்து அதை முழுமையாக முடிக்காமல் விடுவதும் தோல்விதான். இலக்கும், திறமையும் ஒத்துப் போகாத போது, செயலை முடிக்க முடியாது. தோல்வி ஏற்படும்.
ஒன்றை பற்றி விவரமாக புரிந்துகொண்டு பாராட்டுவதை தான் கொண்டாடுவது என்கிறோம். எனவே, தோல்வியை அலசி, ஆராய்ந்து, இலக்கை நம் திறமைக்கு உட்பட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் லட்சியத்திற்கு ஏற்ப, திறமையை வளர்த்துக் கொண்டால் வெற்றி உறுதி. அந்த அளவிற்கு தயாராக இருந்தால், தோல்விக்கு வாய்ப்பே இல்லை.
எனவே தோல்வியை கொண்டாட தெரிய வேண்டும். தோல்விகளை அல்ல.
வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறிமாறி வருவது இயல்பு. முன்னேற வேண்டும் என்பது, எல்லாருக்கும் இருக்கும் ஆசை; அதுவும் இயல்பு. உயர்வு வந்தால், தோல்வியும் வரும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உயர்வும், தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்கள். தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில், ஒருமுறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவன் வெற்றியடைந்தால், அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பலமுறை தோல்வி கண்டு, வெற்றியை தழுவும் ஒருவனால் தான், அதை உண்மையில் உணர முடியும்.
தோல்வியை தெரிந்து, அதற்கு தயாரானால், தோல்விகளுக்கு வாய்ப்பில்லை. ஆகவே, தோல்வியை கொண்டாடுங்கள்.

Sunday, 17 July 2016

மனிதனின் எண்ணத்தெளிவு:

நானொரு மாதுளைப் பழத்தின் 
இதயத்தில் வசித்து வந்தேன். 

ஒரு விதை சொன்னது, 
"ஒரு நாள் நானொரு பெரிய மரமாவேன். 
காற்று என் கிளைகளுக்கிடையில் 
ராகம் பாடும், 
கதிரவன் என் இலைகளின் மேல் 
நடனம் புரியும், 
எல்லாக் காலங்களிலும் நான் 
அழகும் வலிவும் மாறாமல் கொண்டிருப்பேன்." 

இன்னொரு விதை சொன்னது, 
"நானும் உன்னைப் போல் 
இளம்பிராயத்தினனாய் இருந்த போது 
இது போல் நினைத்ததுண்டு. 
இன்றோ 
உண்மை நிலவரம் புரிந்து வைத்துள்ளேன், 
இத்தகு நம்பிக்கைகள் வீணென்று 
கண்டுணர்ந்துள்ளேன்." 

மூன்றாவது விதையும் பேசியது, 
"வளமானதொரு எதிர்காலத்திற்கான 
நம்பிக்கைகள் எதையும் 
நமது தற்கால வாழ்வில் 
நான் காணவில்லை." 

நான்காவது விதை சொன்னது, 
"சீச்சீ..!! 
அப்படி ஒரு நல்ல எதிர்காலம் 
இல்லாமல் போகுமானால் 
எத்தனை ஏமாற்றம்? 
இதற்குத்தானா பிறப்பெடுத்தோம்?" 

ஐந்தாவது விதை சொன்னது, 
"நாம் என்னவாக இருக்கிறோம் 
என்பதே சரியாகப் புரியாத போது 
நாம் என்ன ஆவோம் 
என்பதைப் பற்றி 
ஏன் இத்தனை சர்ச்சை?" 

ஆறாவது விதை பதில் சொன்னது, 
"நாம் என்னவாக இப்போது இருக்கிறோமோ 
அதுவாகவே 
எப்போதும் இருப்போம்." 

ஏழாவது விதை சொன்னது, 
"நாம் எப்படி இருப்போம் 
என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது, 
ஆனால் அதை 
வார்த்தைகளில் விவரிக்கத் தெரியவில்லை." 

இப்படியே மேலும் 
எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது, 
இன்னும் பலப்பல விதைகள் பேசின, 
கடைசியில் எல்லா விதைகளும் 
சேர்ந்து போட்ட கூச்சலில் 
எனக்கு எதுவுமே சரியாகக் கேட்கவில்லை. 

அன்றே நான் 
ஒரு ஆப்பிள் பழத்தின் இதயத்திற்கு 
இடம் மாறி விட்டேன். 
அங்கு விதைகளும் குறைவு, 
அவைகள் அதிகம் பேசுவதுமில்லை.