Friday, 22 July 2016

இதுதான் ரகசியம்

இன்று நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்கள், நாம் எதிர்பார்த்தபடி இல்லை. நம்மை சுற்றியிருக்கும் நட்பு, உறவு, சூழ்நிலை, சமுதாயம் போன்ற அனைத்துமே சரியில்லை என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக நாம் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடாது என்று நமக்கு நாமே தண்டனை கொடுத்துக்கொண்டு கவலையுடனும், பயத்துடனும், வேதனையுடனும் அமைதியற்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பது சரியா?
இதே மனிதர்களுடன், இந்த சூழ்நிலையில், இதே சமுதாயத்தில்தான் நாம் வாழ்ந்தாகவேண்டும். இந்த வாழ்க்கையை வேதனையுடன் கழிப்பவர்கள் அதற்கு விதி என்று பெயரிட்டிருக்கிறார்கள். சிலரோ, `மதியால் விதியை வெல்லலாம்’ என்றும் கூறுகிறார்கள். விதியை மதியால் வெல்வதற்கான சரியான அர்த்தம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
நம் எண்ணங்கள் மூலம், நம் உணர்வுகளை மாற்றலாம். எண்ணங்களை செம்மையாக்கி, உணர்வுகளை மேம்படுத்தி நாம் செய்யும் செயல்கள் அறிவார்ந்தவையாக இருக்கும். அதைத்தான் மதி என்று கூறுகிறோம். அந்த மதி மூலம், விதி என்ற வேதனையை, துயரத்தை நம்மால் போக்க முடியும்.
சமுதாயம், சூழ்நிலை, மனிதர்கள் எல்லாம் மாறினால் நான் நிம்மதியாக இருப்பேன் என்ற எண்ணம் நமக்கு இருப்பது சரியல்ல. நம்மால் நம்மைத்தான் மாற்ற முடியும். மற்றவர்களை மாற்ற முடியாது. அதனால் மற்றவர்கள் மாறினால் நான் நிம்மதியாக இருப்பேன் என்று கூறக்கூடாது. நாம்தான் நம் எண்ணங்களை மாற்றி நம்மை நிம்மதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு எதிரான கருத்தை ஒருவர், சூடாக சொல்லியிருக்கலாம். `அது அவரது கருத்து. அவர் புரியாமல் பேசி இருப்பார். ஏதேச்சையாக அப்படி கூறியிருப்பார். என்னை நோகடிப்பது அவர் நோக்கம் அல்ல..` என்பது போன்ற எண்ணங்களை நீங்களே உருவாக்கி, உங்கள் மனதை நீங்களே ஆறுதல்படுத்திக்கொள்ளவேண்டும்.
சிந்தித்துப்பாருங்கள். ஒருவர் உங்களைப் பற்றி ஒரே ஒரு முறை, உங்களுக்கு பிடிக்காத ஒரு வார்த்தையை பிரயோகித்திருக்கிறார். அதை அதோடு விடாமல் நீங்கள் எத்தனை முறை உங்கள் மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அவர் ஒருமுறையோடு விட்டுவிட, நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப அதை நினைத்து உங்கள் மனதை புண்படுத்தவேண்டும். அவர் அப்படி பேசிவிட்டார் என்று பலரிடம்கூறி, உங்களுக்கு ஏற்பட்ட காயத்தை நீங்களே ஏன் ஆறவிடாமல் செய்யவேண்டும்.
உங்கள் மனதின் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் மகிழ்ச்சி மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் அன்றே, அப்போதே அந்த வார்த்தையை மறந்துவிடுவதுதானே நல்லது.
ஒருவரை நீங்கள் சரியில்லாதவர் என்று கூறிக்கொண்டிருக்கும்போது, சிலர் அவரை சிறந்தவர் என்று கொண்டாடிக்கொண்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அதை வைத்து பார்க்கும்போது எந்த மனிதரும் கெட்டவரில்லை என்பது உங்களுக்கு தெரியவரும். எல்லா மனிதர்களிடமும் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. அதனால் ஒரு மனிதரின் குறைகளை மட்டும் கண்டுபிடித்து, நம் மனதை குறைபடுத்தி, நம் நிம்மதியை கெடுத்துக்கொண்டிருப்பதைவிட, அவரிடம் இருக்கும் நிறையை பெரிதாக்கி, நமக்குள் நிம்மதியை உருவாக்கிக்கொள்வதுதான் நல்லது. கனி இருக்க நாம் ஏன் காயை கவர்ந்திழுக்க வேண்டும்!

நாணயத்தின்’ விலை?


நான் மிகவும் நேர்மையாகவும், நாணயமாகவும் வேலை செய்வேன். அதுதான் எனக்கு பிடிக்கும். அது தான் என் கொள்கை’ என்று சிலர் சொல்வார்கள்.
அவர்களே சில நாட்களில், `நான் அப்படி எல்லாம் நீதி, நியாயம் மாறாமல் வேலை பார்த்து என்ன லாபம்? மற்றவர்கள் எல்லாம் எப்படி எப்படியோ இருக்கிறார்கள். பொய் சொல்கி றார்கள்… ஏமாற்றுகிறார்கள்.. அரைகுறையாகத்தான் வேலைபார்க்கிறார்கள். உண்மையாக உழைத்து என்ன கிடைக்கப் போகிறது. அதை யாரேனும் பாராட்டவா போகிறார்கள்? நாண யத்திற்கும், நேர்மைக்கும் இந்த காலத்தில் மதிப்போ, மரியாதையோ இல்லவேஇல்லை. நான் மட்டும் யோக்கியமாக இருந்து பலனில்லை. ஊர் எப்படி போகிறதோ அப்படியே நானும் போய்விடலாம் என்று நினைக்கிறேன்’ என்று நீண்ட விளக்கம் கொடுப்பார்கள்.
கொஞ்சம் யோசித்து பாருங்கள். நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள். நாணயமாக இருக்கிறீர்கள். உண்மையாக இருக்கிறீர்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
நேர்மை, நாணயம், உண்மையின் மதிப்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். அதனால் அப்படி வாழ்கிறீர்கள். விலை மதிப்பற்ற அந்த நற்குணங்கள் உங்களுக்கு சுயமரியாதையையும், சுய கவுரவத்தையும் கொடுக்கும். மிகச் சிறந்த ஆத்ம திருப்தியையும் அது தரும்.
உங்களுக்கு இத்தனையும் கிடைக்கும்போது மற்றவர்கள் பாராட்டினால் என்ன.. தூற்றி னால் என்ன! அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படவேண்டும்.
“நற்பண்புகள் என் வாழ்க்கையின் அஸ்திவாரம். அதை நான் எதற்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டேன். அதன் மூலம் என் மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. அந்த நற்குணங்கள் இன்னமும் இந்த உலகத்தில் மறைந்துவிடாமல் என்னால் காப்பாற்ற முடிகிறது என்ற திருப்தியும் ஏற்படுகிறது.
ஒரு சிலர் 500, 1,000 ரூபாய் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாணயமாகவும், நேர்மை யாகவும் இருப்பார்கள். அதுவே ஒரு சில லட்சங்கள் என்றாகும்போது அந்த நாணயத்தை யும், நேர்மையையும் விட்டு கொடுத்து விடுவார்கள். “நேர்மைக்கும், நாணயத்திற்கும் என்னால் விலை நிர்ணயிக்க முடியாது. நான் நானாக வாழ விரும்புகிறேன்” என்று உங்களுக்குள்ளே தினமும் கூறிக்கொள்ளுங்கள். அதன்படி வாழ்ந்து பாருங்கள். எல்லை யற்ற இன்பத்தோடு உங்களால் வாழ முடியும். அதற்குரிய பலனும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.

மறப்போம் மன்னிப்போம்

‘மறந்து விட்டேன், மறந்து போனது, அச்சச்சோ! இப்படி மறந்து போகிறேனே’ என்று அங்கலாய்க்கிறோம். ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்தத்தான் முயல்கிறோம், முயல வேண்டும் என்றும் சொல்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு விஷயத்தை மறப்பதற்கு தான் உண்மையில் முயல வேண்டி இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை மறக்க முடியாமல் தான் துன்பப்படுகிறோம்; துன்பப்படுத்துகிறோம்.
ஒரு நிகழ்வை சந்திக்கிறோம். அந்நிகழ்விற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பொறுத்து தான் அதை சந்திக்கிறோமா, எதிர் கொள்கிறோமா என்பது முடிவாகிறது. அதை பொறுத்து, நமக்குள் ஏற்படும் அனுபவங்களுக்கு ஏற்ப, உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. அதை பொறுத்து இன்பம், துன்பம் தீர்மானிக்கப்படுகிறது.
உணர்வின் வெளிப்பாட்டிற்கு ஏற்ப அந்த சம்பவம் முக்கியத்துவத்தை பெறுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு உணர்ச்சி கொந்தளிப்பிற்கு காரணமாகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அது தீவிரமாக, நினைவில் நீங்காமல் நிற்கிறது. ஒன்றை மறக்க வேண்டுமானால், அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நிறுத்த தெரிய வேண்டும்.
முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க முயற்ச்சி, பயிற்சி மற்றும் அனுபவம் தேவை.
எனவே, ஒன்றை மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் அடிப்படை, சம்பவத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருக்க தெரிய வேண்டும். எனவே, முயற்சி செய்து மன்னித்து மறப்போமாக!

தோல்வியை கொண்டாடுங்கள்

தோல்வி என்றால் என்ன; போட்டியில் தோற்பது தான்
தோல்வி என, நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல.
ஏதாவது ஒரு காரியத்தை எடுத்து அதை முழுமையாக முடிக்காமல் விடுவதும் தோல்விதான். இலக்கும், திறமையும் ஒத்துப் போகாத போது, செயலை முடிக்க முடியாது. தோல்வி ஏற்படும்.
ஒன்றை பற்றி விவரமாக புரிந்துகொண்டு பாராட்டுவதை தான் கொண்டாடுவது என்கிறோம். எனவே, தோல்வியை அலசி, ஆராய்ந்து, இலக்கை நம் திறமைக்கு உட்பட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் லட்சியத்திற்கு ஏற்ப, திறமையை வளர்த்துக் கொண்டால் வெற்றி உறுதி. அந்த அளவிற்கு தயாராக இருந்தால், தோல்விக்கு வாய்ப்பே இல்லை.
எனவே தோல்வியை கொண்டாட தெரிய வேண்டும். தோல்விகளை அல்ல.
வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறிமாறி வருவது இயல்பு. முன்னேற வேண்டும் என்பது, எல்லாருக்கும் இருக்கும் ஆசை; அதுவும் இயல்பு. உயர்வு வந்தால், தோல்வியும் வரும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உயர்வும், தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்கள். தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில், ஒருமுறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவன் வெற்றியடைந்தால், அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பலமுறை தோல்வி கண்டு, வெற்றியை தழுவும் ஒருவனால் தான், அதை உண்மையில் உணர முடியும்.
தோல்வியை தெரிந்து, அதற்கு தயாரானால், தோல்விகளுக்கு வாய்ப்பில்லை. ஆகவே, தோல்வியை கொண்டாடுங்கள்.

Sunday, 17 July 2016

மனிதனின் எண்ணத்தெளிவு:

நானொரு மாதுளைப் பழத்தின் 
இதயத்தில் வசித்து வந்தேன். 

ஒரு விதை சொன்னது, 
"ஒரு நாள் நானொரு பெரிய மரமாவேன். 
காற்று என் கிளைகளுக்கிடையில் 
ராகம் பாடும், 
கதிரவன் என் இலைகளின் மேல் 
நடனம் புரியும், 
எல்லாக் காலங்களிலும் நான் 
அழகும் வலிவும் மாறாமல் கொண்டிருப்பேன்." 

இன்னொரு விதை சொன்னது, 
"நானும் உன்னைப் போல் 
இளம்பிராயத்தினனாய் இருந்த போது 
இது போல் நினைத்ததுண்டு. 
இன்றோ 
உண்மை நிலவரம் புரிந்து வைத்துள்ளேன், 
இத்தகு நம்பிக்கைகள் வீணென்று 
கண்டுணர்ந்துள்ளேன்." 

மூன்றாவது விதையும் பேசியது, 
"வளமானதொரு எதிர்காலத்திற்கான 
நம்பிக்கைகள் எதையும் 
நமது தற்கால வாழ்வில் 
நான் காணவில்லை." 

நான்காவது விதை சொன்னது, 
"சீச்சீ..!! 
அப்படி ஒரு நல்ல எதிர்காலம் 
இல்லாமல் போகுமானால் 
எத்தனை ஏமாற்றம்? 
இதற்குத்தானா பிறப்பெடுத்தோம்?" 

ஐந்தாவது விதை சொன்னது, 
"நாம் என்னவாக இருக்கிறோம் 
என்பதே சரியாகப் புரியாத போது 
நாம் என்ன ஆவோம் 
என்பதைப் பற்றி 
ஏன் இத்தனை சர்ச்சை?" 

ஆறாவது விதை பதில் சொன்னது, 
"நாம் என்னவாக இப்போது இருக்கிறோமோ 
அதுவாகவே 
எப்போதும் இருப்போம்." 

ஏழாவது விதை சொன்னது, 
"நாம் எப்படி இருப்போம் 
என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது, 
ஆனால் அதை 
வார்த்தைகளில் விவரிக்கத் தெரியவில்லை." 

இப்படியே மேலும் 
எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது, 
இன்னும் பலப்பல விதைகள் பேசின, 
கடைசியில் எல்லா விதைகளும் 
சேர்ந்து போட்ட கூச்சலில் 
எனக்கு எதுவுமே சரியாகக் கேட்கவில்லை. 

அன்றே நான் 
ஒரு ஆப்பிள் பழத்தின் இதயத்திற்கு 
இடம் மாறி விட்டேன். 
அங்கு விதைகளும் குறைவு, 
அவைகள் அதிகம் பேசுவதுமில்லை.

Friday, 15 July 2016

13. கடவுளும் சாத்தானும்


கடவுளும் சாத்தானும்
ஒரு நாள்
மலையுச்சியில் சந்தித்தனர்.

கடவுள் சொன்னார்,
"சகோதரா,
உனது நாள்
நன்றானதாக அமையட்டும்..!"

சாத்தான்
மறுமொழி ஏதும் கூறவில்லை.

கடவுள் தொடர்ந்தார்,
"ஏதேது,
நீ இன்று
மிகவும் கோபமாக இருக்கிறாய்
போலிருக்கிறதே..!"

சாத்தான் சொன்னது,
"எல்லாம்
இந்த முட்டாள் மனிதர்களால் தான்.
இப்போதெல்லாம் சில காலமாக
அவர்கள் என்னை நீயென்று
நினைத்துக் கொள்கிறார்கள்.
உன் பேர் சொல்லி என்னை அழைப்பது,
உன்னைப் போல் என்னை நடத்துவது,
சீச்சீ,
எதுவும் எனக்குப் பிடிப்பதில்லை..!"

கடவுள் புன்னகைத்துச் சொன்னார்,
"அதனாலென்ன சகோதரா,
சில நேரங்களில்
இந்த மனிதர்கள்
என்னைக் கூடத்தான்
நீயென்று நினைத்துக் கொள்கிறார்கள்,
உன் பேர் சொல்லி என்னை அழைத்து
சபிக்கிறார்கள்,
அதனாலெல்லாம் நான் வருந்துவதில்லை..!"

சாத்தான் சமாதானமடையாமல்
மனிதர்களின் முட்டாள்தனத்தை
நொந்து கொண்டபடி நடந்து சென்றது.

Wednesday, 13 July 2016

நம்மை முடக்கும் நங்கூரங்கள்!

உங்கள் அனைவரின் எண்ணங்களையும் சிறிது அறிந்ததால் இதனை கூறுகின்றேன் இதில் ஏதேனும் தவறாக கூறி உங்களை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும் ஆனால் நான் சொல்வது என்னவென்று ஒரு நாள்உங்கள்அனைவருக்கும்  புரியும் ...

நம்மை முடக்கும் நங்கூரங்கள்!

நாளைய பளுவை நேற்றைய பளுவோடு சேர்த்து இன்று தூக்க முயற்சிக்கும்போது பலசாலியும் தடுமாறுகிறான்!கடந்த காலத்தை விலை கொடுத்து வாங்கும் அளவு எவரும் பணக்காரர் ஆக முடியாது. நம்மை முன்னேற முடியாமல் தடுப்பது 'நம்மை கட்டுப்படுத்தும்சுயஅவநம்பிக்கை அல்லது சுயசந்தேகம்' என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.நமக்குப் பிடித்த லட்சியத்தை நோக்கி நாம் நடைபோடும்போது இடையூறுகள் குறுக்கிடுவது உறுதி. அந்த குறுக்கீடுநம்மிடம் இருந்தேவரலாமா?அதுநியாயமா?ஏற்கனவே 'முடியாது' என்று முடிவு செய்துவிட்டால் நமது எண்ணம் 'முடியும்' நோக்கத்தில் நம்மைச்செயல்பட அனுமதிக்காது. 

அதுபெரும்பாலும் நமக்குப் புரிவதில்லை. அடைத்து வைத்த அறையில் காற்று புகுமா?திறந்த அறைக்குள்தான் காற்று வரும். ஒட்டடைதூசிஉள்ள அறைக்குள் காற்று நுழைந்தாலும் அக்காற்று அசுதமாகத்தானே இருக்கும்அதுபோல நமது மனதிற்குள் உள்ள பயம்அறியாமைஅவநம்பிக்கை என்கிற தூசிஒட்டடைகளைத் துப்பரவு செய்து மனஜன்னலைவிசாலமாகத்திறந்துவைத்தால் 'முடியும்' என்கிற நேர்மறை எண்ணங்கலெனும் வசந்தம்வீசத் தொடங்கும்.இன்றே நம்மால் செய்ய முடிந்ததை ஒருபோதும் நாளை வரை தள்ளிப்போடக் கூடாது. வெற்றிக்கு இது ஒரு முக்கியமான சூத்திரம்! நேற்றைய தினம் நல்லதாக இருந்திருந்தால் மகிழ்ச்சியைத் தந்திருக்கும். கெட்டதாக இருந்திருந்தால் அனுபவத்தைத் தந்திருக்கும். நமக்கு மகிழ்ச்சிஅனுபவம் இரண்டுமே அவசியம். அப்படி இருக்கும்போது நாளைகோளை பழித்திடாமல் நம்மை முழுமையாக நம்புதல் அவசியம்.ஒன்றை நாம் புரிந்து கொள்வோம். எல்லைகளுக்குள் இருக்கிறது நமது உள்ளம். எல்லைகள் இல்லாதது உலகம். நமது வாழ்க்கை சில எல்லைகளுக்குள்தான் வாழப்படுகிறது. வரம்புக்குட்பட்ட வளங்கள்எல்லைக்குள் அடங்கிய திறமைகள்பிறரால் வகுக்கப்படும் எல்லைகள் என இப்படி எத்தனை எல்லைகள்அதனால் எத்தனை தொல்லைகள்..!நமது பௌதீகச் சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட எல்லைகள்சமூக சூழலால் வகுக்கப்பட்ட வரம்புகள்நமது திறமையில் இருக்கும் கட்டுப்பாடுகள்இதுதவிர நமக்குநாமே வகுத்துக்கொள்ளும் வரம்புகள்இப்படி எல்லாவற்றையும் கடந்துதான் வெற்றி கிடைக்கிறது. ஏமாற்றம்கோபம்வெறுப்பு என்கிற நிலைக்கு நாம் தள்ளப்படுவது இந்த வரம்புக்குள் வாழத்தெரியாததால் தான். வரம்புகளை எட்டி உதைக்கும் வீண் முயற்சியில் வாழ்நாள் முழுவதையும் கழித்து தன்னிரக்கத்தால் அழுவதை நாம் தவிர்ப்பது மிக மிக அவசியம்.சரியான முறையில் செய்யப்படும் முயற்சி, எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடும் என்பதை நினைவில் கொள்வோம். வாழ்வில் முன்னேறுவோம்!